சென்னை
தமிழகத்தைச் சேர்ந்த 70 ஆண்டு கால பிரபல தமிழக நிறுவனம் விட்கோ கொரோனாவால் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிரபலமான லக்கேஜ் நிறுவனமான விட்கோ கடந்த 1951 ஆம் ஆண்டு சென்னை ஜார்ஜ் டவுனில் 500 சதுர அடியில் தனது வர்த்தகத்தைத் தொடர்ந்தது. தற்போது அது தனி பிராண்டாக வளர்ந்து சென்னை மட்டுமின்றி, பெங்களூரு, கொச்சின், மும்பை, டில்லி என பல நகரங்களிலும் கிளைகளைப் பரப்பியது. லக்கேஜ் சந்தையில் சுமார் 60% அளவுக்குப் பரவி இருந்த விட்கோ மக்களின் அபிமான பிராண்டாக இருந்து வந்தது.
ஆயினும் கொரோனா தொற்றின் தாக்கம் இந்த நிறுவன வர்த்தகத்தை மிகவும் முடக்கியது. தற்போது மீண்டும் இரண்டாம் அலையால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பலருடைய பயணங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணத்துக்குத் தேவையான பெரிய அளவு பெட்டிகள், பைகள் ஆகிய லக்கேஜை விற்பனை செய்யும் விட்கோ நிறுவனம் பெரிதும் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் விட்கோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
“நாங்கள் எங்கள் வர்த்தகத்தை முற்றிலும் மூடுகிறோம் என்று சொல்வதில் வருத்தமடைகிறோம். கோவிட்-19 தொற்று மற்றும் அதனால் ஏற்பட்ட ஊரடங்கால் முடங்கிய வெளிநாட்டுப் பயணங்களின் தாக்கத்தால் இந்த முடிவை எடுக்கவேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளோம். இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல, ஆனால் எங்களால் இந்த தாக்கத்தை சமாளிக்க இயலாததால் எடுக்கப்பட்டது. 70 ஆண்டுகளாக எங்களின் ப்ராண்டுக்கு முழு ஆதரவு கொடுத்த அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் எங்களின் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.” – விட்கோ குடும்பம்”
என அறிவிக்கப்பட்டுள்ளது.