டில்லி
பாஜகவுக்கு எதிராக 70 அமைப்புகள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
மக்களவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்குகிறது. அரசியல் கட்சிகள் பிரசாரத்தின் மூலம் வாக்கு சேகரிப்பை மும்முரமாக நடத்தி வருகின்றன. கட்சிகள் மட்டுமின்றி ஒரு சில அமைப்புக்களும் தேர்தல் பிரசாரத்தில் இணைந்துள்ளன. குறிப்பாக இடதுசாரி ஆதரவு அமைப்புக்கள் ஒருங்கிணைந்து பிரசாரம் செய்து வருகின்றன.
இவ்வாறு இளம் இந்தியர் கூட்டமைப்பு என்னும் ஒரு இடது சாரி அமைப்புக்களின் ஒருங்கிணைப்பு பாஜகவுக்கு எதிராக பிரசாரம் செய்து வருகிறது. இந்த கூட்டமைப்பின் கீழ் 70 க்கும் மேற்பட்ட அமைப்புக்கள் இணைந்துள்ளன. இந்த கூட்டமைப்பு கடந்த பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதி அன்று அரசுக்கு எதிராக ஊர்வலம் ஒன்றை டில்லியில் நடத்தியது.
அந்த ஊர்வலத்தின் போது வர உள்ள மக்களவை தேர்தலில் பாஜக்வை எதிர்த்து பிரசாரம் செய்ய இந்த கூட்டமைப்பு முடிவு எடுத்தது. இது குறித்து இந்த கூட்டமைப்பை சேர்ந்த ஆசிஷ், நிசார் அகமது, மற்றும் மாணவர் தலைவர் சாய் பாலாஜி ஆகியோர், “பிரதமர் மோடி ஒவ்வொரு வருடமும் 2 கோடி புதிய வேலைவாய்ப்பை அமைக்க உள்ளதாக வாக்குறுதி அளித்தார். ஆனால அவரால் 2000 வேலை வாய்ப்பைக் கூட அளிக்க முடியவில்லை.
இதனால் பாஜகவுக்கு எதிராக உத்திரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் மற்றும் ராஷ்டிரிய லோக் தளம் கட்சிகள் இணைந்துள்ளன. அவர்கள் வழியில் இளைஞர்களும் மோடிக்கு பாடம் புகட்ட உள்ளனர். அலகாபாத்தில் துப்புறவு தொழிலாளர்கள் காலை கழுவி மோடி ஒரு நாடகம் நடத்தி உள்ளார். அவர்கள் மீது அக்கறை இருந்தால் மோடி அவர்களுக்கு வேலை வாய்ப்பை உண்டாக்கி இருக்க வேண்டும்.
சுகாதாரத் துறையை இந்த அரசு முழுவதுமாக ஒதுக்கி உள்ளது. அரசு மருத்துவமனைகளின் அவல நிலையால் மக்கள் தனியார் மருத்துவமனையை தேடுகின்றனர். ஏழை மக்களை இந்த அரசு இரண்டாம் தர குடிமக்களாக நடத்தி வருகிறது. தற்போது பாஜக அரசு ஆர் எஸ் எஸ் சொல்வதை மட்டுமே கேட்டு வருகிறது” என தெரிவித்துள்ளனர்.