சென்னை:  தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 4 ஆண்டுகளில் 70 கேங்மேன்கள் பணியின்போது உயிரிழந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு மற்றும் மின்சார வாரியம் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை சிறுசேரியைச் சேர்ந்த சமூக ஆர்வலரான டி.வெண்ணிலா  என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கின் விசாரணையின்போது,  போதுமான ஊழியர்கள் இல்லாத நிலையில்,  மின்சார வாரிய உயர் அதிகாரிகள்,  கேங்மேன்களை தொழில்நுட்ப பணிகளுக்கு ஈடுபடுத்துவதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவதாகவும், கடந்த 4 ஆண்டுகளில் 70 பேர் பலியாகி உள்ளதாகவும் கூறப்பட்டது.

மேலும், தமிழ்நாடு  மின்வாரியத்தில் பல்வேறு தொழில்நுட்ப பணிகளுக்கு உரிய பணியாளர்கள் நியமிக்கப்படாத நிலையில்,  அதிகாரிகள் திறன் சாராத கேங்மேன்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 70 கேங்மேன்கள் மின் விபத்து ஏற்பட்டு மரணமடைந்துள்ளதுடன்,  . 100-க்கும் மேற்பட்டோர் மின் விபத்துகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் நெல்லை மாவட்டத்திலும் கூட ஒரு கேங்மேன் பரிதாபமாக இறந்துள்ளார். ஏற்கனவே இதுதொடர்பான வழக்கில்,  கேங்மேன்களை இதுபோன்ற பணிகளுக்கு பயன்படுத்தக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், அந்த உத்தரவை அதிகாரிகள் மதிப்பதில்லை என்று சுட்டிக்காடிடடிய மனுதாரர் வழக்கறிஞர், எனவே முறையான பயிற்சியும், போதிய தொழில்நுட்ப திறனும் இல்லாத  கேங்மேன்  தொழில்நுட்ப பணிகளுக்கு பயன்படுத்தக் கூடாது என டான்ஜெட்கோவுக்கு உத்தரவிடக்கோரினார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பி.பி. பாலாஜி மற்றும் ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எம் வேல்முருகன் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பாக  ஏற்கனவே உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியும், அதை மதிக்காத  மின்வாரிய அதிகாரிகளை கடுமையாக கண்டித்ததுடன், இதுதொடர்பாக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம்., தமிழ்நாடு அரசு ஆகியவை  இரு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.