சென்னை

ன்றும் நாளையும் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கடும் வெப்பம் நிலவும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த சில நாட்களாகத் தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் மிகவும் கடுமையாகி உள்ளது.  பகல் வேளைகளில் சென்னை, செங்கல்பட்டு காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெளியே தலை காட்ட முடியாத அளவுக்கு வெயில் அடிக்கிறது.  கடும் அனல்காற்று வீசுவதால் மக்கள் மிகவும் தவித்து வருகின்றனர்.

இன்று சென்னை வானிலை மையம் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  அதில், ”வரும் திங்கள், செவ்வாய் ஆகிய இரண்டு நாட்களில், சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருப்பூர், திண்டுக்கல், கோவை ஆகிய 7 மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.  இங்கு  இயல்பை விட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை உயரக்கூடும்.

வட கடலோர மாவட்டங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெயில் அதிகரிக்கும்.   இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், பகல் 12 மணி முதல் மாலை 4 மணிவரை திறந்தவெளியில் பயணிப்பதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்

வரும் புதன் மற்றும் வியாழக்கிழமை ஆகிய தினங்களில் தெற்கு மற்றும் தென்கிழக்கு திசை காற்றின் காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் வெப்பநிலை குறைய வாய்ப்புள்ளதாகவும்,  இயல்பைவிட 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை மட்டுமே உயரக்கூடும்.

தவிர வட தமிழக மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.   சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி அளவிற்கு இருக்கும்” என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.