ஷிரூர்
கர்நாடகா மாநிலம் உத்தர கன்னட மாவட்ட்த்தில் ஏர்பட்ட திடீர் நிலச்சரிவில் 7 பேர் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இன்று கர்நாடகாவின் உத்தர கன்னட மாவட்டத்தில் உள்ள ஷிரூரில் திடீரென ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் ஐந்து பேர் கொண்ட குடும்பம் உட்பட 7 பேர் பலியாகி உள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. தேசிய நெடுஞ்சாலை 66-ல் சாலையோரம் பெட்டிக்கடை நடத்தி வந்த குடும்ப உறுப்பினர்கள், மலையிலிருந்து சரிந்து விழுந்த மண்ணில் சிக்கியிருக்கலாம் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
நிலச்சரிவினால் எரிவாயு டேங்கர் ஒன்று, அருகில் உள்ள கங்காவலி ஆற்றுக்குள் தள்ளப்பட்டுள்ளது, சம்பவத்தின் போது கடையில் தேநீர் அருந்திக் கொண்டிருந்த வாகனத்தின் ஓட்டுநர் மற்றும் கிளீனரைக் காணவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் இந்த விவகாரத்தை எழுப்பிய கார்வார் எம்.எல்.ஏ. சதீஷ் சைல், நிலச்சரிவைத் தொடர்ந்து கங்காவலி ஆற்றில் 10 முதல் 15 பேர் விழுந்திருக்கலாம் என்று தனக்கு கிடைத்த அறிக்கையின்படி கூறினார். வருவாய்த்துறை மந்திரி கிருஷ்ண பைரே கவுடா இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் அறிக்கை கேட்டுள்ளதாகவும், அதுகுறித்து அறிக்கை வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.