10 நாட்களுக்கு முன்பு எண்ணூர் அருகே உள்ள அதானி காட்டுப்பள்ளி துறைமுகத்தில் இரண்டு கன்டெய்னர்களில் இருந்து ரூ.9 கோடி மதிப்புள்ள வெள்ளிக் கட்டிகளைக் கொள்ளையடித்த வழக்கில் ஏழு பேர் கொண்ட கும்பலை ஆவடி நகர காவல்துறை கைது செய்துள்ளனர்.
மார்ச் 30 அன்று லண்டனில் இருந்து சென்னை வந்திறங்கிய இந்த கன்டெய்னர்களை இறக்குமதி செய்த நிறுவனம், ஏப்ரல் 3ம் தேதி ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தங்கள் கிடங்கிற்கு கொண்டு சென்ற நிலையில் அதன் சீல் அடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
மேலும், அதிலிருந்து சுமார் 900 கிலோ வெள்ளி திருடப்பட்டதும் தெரியவந்தது. இதுகுறித்து காட்டூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வெள்ளிக் கட்டிகளை இறக்குமதி செய்த நிறுவனம், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு பாதுகாப்பான தளவாட வழங்குநராக உள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.
துறைமுகம் வந்திறங்கிய கன்டெய்னர்களின் சீல் உடைக்கப்பட்டது குறித்து சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், துறைமுக ஊழியர்கள், பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் அங்குள்ள பிற தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணைக்குப் பின், துறைமுகத்தில் மேற்பார்வையாளராகப் பணிபுரியும் ஆகாஷ் (24), எபனேசர் (46), மற்றொரு மேற்பார்வையாளர், துறைமுகத்திற்கு வழக்கமான பயணங்களை மேற்கொள்ளும் லாரி ஓட்டுநர் நவீன் குமார் (25) மற்றும் அவர்களது கூட்டாளிகளான கோட்டைகுப்பத்தைச் சேர்ந்த தேசிங் (55), குணசீலன் (29), எர்ணாவூரைச் சேர்ந்த சந்தோஷ் (28), நந்தியம்பாக்கத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் (39) உள்ளிட்ட ஏழு பேரை கைது செய்த காவல்துறையினர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபின் சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து சுமார் 600 கிலோ வெள்ளிக் கட்டிகள் மீட்கப்பட்டன. கண்டெய்னர்கள் துறைமுகத்தில் இருந்தபோது சிதைக்கப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிந்ததால், இதில் துறைமுகப் பணியாளர்களின் பங்கு குறித்து காவல்துறை மேலும் விசாரணை மேற்கொண்டு வருகிறது.