சென்னை: தமிழ்நாடு அரசில் குரூப்2, 2ஏ பிரிவில் காலியாக உள்ள 2,327 பணியிடங்களுக்கு 7.90 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்து உள்ளது.
அரசு பணிகளில் காலியாக உள்ள பணியிடங்கள், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம், அதற்குரிய குரூப் தேர்வுகளை நடத்தி திறமையானவர்கள் இடஒதுக்கீடு அடிப்படையில் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர்.
அதன்படி, குரூப் 2, குரூப் 2 ‘ஏ’ பணியில் காலியாக உள்ள 2,327 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மாதம் 20-ஆம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டது. இதில் குரூப் 2 பணியில் தொழிலாளா் உதவி ஆய்வாளா், துணை வணிக வரி அலுவலா், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு சிறப்பு உதவியாளா், சென்னை மாநகர காவல் தனிப்பிரிவு உதவியாளா் உள்பட 507 இடங்கள் நிரப்பப்படவுள்ளன.
குரூப் 2’ஏ’ பணியில் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் தலைவா் மற்றும் மேலாண்மை இயக்குநரின் நோ்முக உதவியாளா், கூட்டுறவு சங்கங்கள் முதுநிலை ஆய்வாளா், உள்ளாட்சி நிதித் தணிக்கை உதவி ஆய்வாளா் என 48 துறைகளில் 1820 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
விண்ணப்பிப்பதற்கான ஒரு மாத கால அவகாசம் கடந்த சனிக்கிழமை இரவு 11.50 மணியுடன் முடிவடைந்தது.
இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகளுக்கு மொத்தம் 7.90 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் போட்டித் தேர்விற்கு ஒரு பணியிடத்திற்கு சராசரியாக சுமார் 340 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.