டில்லி:
நாடாளுமன்ற தேர்தல் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், 6வது கட்டத் தேர்தல் வாக்குப் பதிவு நாளை நடைபெற உள்ளது. நாடு முழுவதும் 7 மாநிலங்களை சேர்ந்த 59 தொகுதிகளில் நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி தொடர்ந்து 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே 5 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், 6-வது கட்டமாக 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கும் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
அதன்படி பிஹார் (8 தொகுதிகள்), அரியாணா (10), ஜார்க்கண்ட் (4), மத்திய பிரதேசம் (8), உத்தர பிரதேசம் (14), மேற்குவங்காளம் (8), டெல்லி (7) ஆகிய 7 மாநிலங்களில் 6-வது கட்ட தேர்தல் நடைபெறுகிறது.
இந்த மாநிலங்களில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகவே தீவிர தேர்தல் பிரசாரம் நடைபெற்று வந்த நிலையில் நேற்றுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது.
நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள உள்ள தொகுதிகளில் முக்கிய தலைவர்களான உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், மத்திய அமைச்சர் மேனகா காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், டில்லி மாநில முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித், கிரிக்கெட் வீரர் கவுதம் போன்றோர் களத்தில் உள்ளனர். இவர்களின் தலையெழுத்து நாளை முடிவு செய்யப்பட உள்ளது.
59 தொகுதிகளிலும் நாளை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்காளத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் 8 தொகுதிகளிலும் அதிகபட்சமாக 70 ஆயிரம் பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
டெல்லியில் 7 தொகுதிகளிலும் துணை ராணுவப்படையினர் 60 ஆயிரம் பேர் குவிக்கப்பட்டு உள்ளனர்.
வாக்குப்பதிவு நடைபெறும் 59 தொகுதிகளிலும் 979 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 311 வேட்பாளர்கள் கோடீஸ்வர வேட்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வாக்குப்பதிக்கான ஏற்பாடுகள் முடிவடைந்துள்ள நிலையில், இன்று வாக்குப்பதிவு இயந்திரம் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட உள்ளது.