டில்லி,

நாடு முழுவதும் இன்று இந்திய குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.  குடியரசு தினத்தை முன்னிட்டு டில்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

சரியாக 9.57 மணிக்கு விழா நடக்கும் இடத்திற்கு வந்த குடியரசு தலைவரை பிரதமர் மோடி உள்பட முக்கிய அமைச்சர்கள், முப்படை தளபதிகள் வரவேற்று அழைத்துச் சென்றனர்.

அதையடுத்து,  டில்லி ராஜபாதையில் அமைக்கப்பட்டுள்ள விழா மேடையில்  தேசிய கொடியை சரியாக 10 மணிக்கு குடியரசு தலைவர்  ஏற்றினார்.

21 பீரங்கி குண்டுகள் முழங்க, முப்படை வீரர்கள் மரியாதை செய்ய ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

கடந்த ஆண்டு பதவியேற்ற இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த முதன்முறையாக  தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தார்.

சிறப்பு மிகு இந்த நிகழ்ச்சியில் வெளிநாடுகளை சேர்ந்த 10 தலைவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.  இதன் காரணமாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து குடியரசு தின அணிவகுப்பு தொடங்கியது. இந்த  அணிவகுப்பு  பகல் 11.30 மணி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று காலை பிரதமர் மோடி இந்தியா கேட் பகுதியில் உள்ள அமர் ஜவான் ஜோதிக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.