டெல்லி
நேற்று நடந்த நாடாளுமன்ற 3 ஆம் கட்டத்தேர்தலி்ல் 64.40% வாக்குகள் பதிவாகி உள்ளன.
நாடெங்கும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த 19ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு 2ம் கட்ட தேர்தல் கடந்த 26ம் தேதியும் நடைபெற்றது. முதற்கட்ட தேர்தலில் 66.14 சதவிகிதமும், 2ம் கட்ட தேர்தலில் 66.71 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது.
நேற்று 93 தொகுதிகளுக்கு நேற்று 3ம் கட்ட தேர்தல் நடைபெற்றது. குஜராத் (25 தொகுதிகள்), கர்நாடகா (14), மகாராஷ்டிரா (11), உத்தரபிரதேசம் (10), மத்திய பிரதேசம் (9), சத்தீஷ்கார் (7), பீகார் (5), அசாம் (4), மேற்கு வங்காளம் (4), கோவா (2), தத்ரா-ஹவேலி-டையூ-டாமன் (2) என 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 93 தொகுதிகள் தேர்தல் நடைபெற்றது.
வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. ஆயினும் ஒருசில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இரவுவரை நீடித்தது. நாடாளுமன்ற 3 ம் கட்ட தேர்தலில் இரவு 11.40 மணி நிலவரப்படி 64.40 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில வாரியாக வாக்குப்பதிவு விவரம்:-
அசாம் – 81.61%
பீகார் – 58.18%
சத்தீஷ்கார் – 71.06%
தத்ரா-ஹவேலி-டையூ-டாமன் – 69.87%
கோவா – 75.20%
குஜராத் – 58.98%
கர்நாடகா – 70.41%
மத்தியபிரதேசம் – 66.05%
மராட்டியம் – 61.44%
உத்தரபிரதேசம் – 57.34%
மேற்குவங்காளம் – 75.79%