சென்னை: சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த மாதம் (பிப்ரவரி ) 63.69 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர் என மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது அதன் இரண்டாம் கட்டம் மற்றும் 3ம் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், கோவை, மதுரையிலும் மெட்ரோ ரயில் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.
இந்த நிலையில், மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிபிபல், 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், 63 லட்சத்து 69 ஆயிரத்து 282 பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணித்துள்ளதாகவும், இந்த பயணிகள் எண்ணிக்கை கடந்த ஜனவரி மாதத்தை விட சற்று குறைவாகவே இருக்கும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
* 01.01.2023 முதல் 31.01.2023 வரை மொத்தம் 66,07,458 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
* 01.02.2023 முதல் 28.02.2023 வரை மொத்தம் 63,69,282 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
* அதிகபட்சமாக 10.02.2023 அன்று 2,61,668 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
2023, பிப்ரவரி மாதத்தில் மட்டும் க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 20,20,027 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 39,85,113 பயணிகள் பயணித்துள்ளார்கள்.
நடப்பாண்டில் கடந்த ஜனவரி மாதத்தில் 66 லட்சத்து 7 ஆயிரத்து 458 பயணிகள் பயணித்துள்ளனர். பிப்ரவரி மாதத்தில் 63 லட்சத்து 69 ஆயிரத்து 282 பயணிகள் பயணித்துள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் 28 நாட்கள் என்பதால் ஜனவரி மாத்தை விட பிப்ரவரி மாதத்தில் பயணிகளின் எண்ணிக்கை சற்று குறைவாகவே காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு மற்றும் பயண அட்டைகளை (Travel Card) பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு 20% கட்டணத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.