ஸ்ரீநகர்

நேற்று நடந்த ஜம்மு காஷ்மீர் முதல் கட்ட தேர்தலில் 61% வாக்குகள் பதிவாகி உள்ளன.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டு ஜம்மு மற்றும் காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இவற்றில், ஜம்மு மற்றும் காஷ்மீர் சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசம் என்ற அந்தஸ்து பெற்றுலடாக்கிற்கு சட்டசபை இல்லாத யூனியன் பிரதேச அந்தஸ்து வழங்கப்பட்டது.

நடப்பு ஆண்டு செப்டம்பர் மாத இறுதிக்குள் ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதால் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இவற்றில் முதல்கட்ட தேர்தலில், காஷ்மீரில் 16 தொகுதிகள் மற்றும் ஜம்மு பகுதியில் 8 தொகுதிகள் என மொத்தம் 24 தொகுதிகளுக்கான வாக்கு பதிவானது,

தேர்தல் ஆணையம் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்கு பதிவு அமைதியாக நடந்து முடிந்து மாலை 6 மணியளவில் நிறைவடைந்தது என தெரிவித்துள்ளது. நேற்று இரவு 11.30 மணியளவிலான தேர்தல் ஆணைய தரவுகளின்படி, ஜம்மு மற்றும் காஷ்மீரின் முதற்கட்ட சட்டசபை தேர்தலில் 61.13 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

இதில் அதிக அளவாக கிஷ்த்வார் மாவட்டத்தில் 80.14 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. அடுத்ததாக தோடா (71.34 சதவீதம்), ராம்பன் (70.55 சதவீதம்), குல்காம் (62.60 சதவீதம்), அனந்த்நாக் (57.84 சதவீதம்) மற்றும் சோபியான் (55.96 சதவீதம்) வாக்குகளும் பதிவாகி உள்ளன.  மேலும் புல்வாமா மாவட்டத்தில் மிக குறைந்த அளவாக 46.65 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.