சென்னை: மீன்களின் இனப்பெருக்க காலம் என்பதால் தமிழகம் முழுவதும் கடலோர பகுதிகளில் நாளை முதல் 61 நாட்களுக்கு மீன்பிடி தடைகாலம் அமலாகிறது.
இந்த ஆண்டின் மீன்பிடித் தடைகாலம் வருகிற 15-ந் தேதி (நாளை) முதல் தொடங்க உள்ளது. இதைத்தொடர்ந்து, ராமேஸ்வரம் பகுதியில் 100-க்கும் குறைவான படகுகள் மட்டுமே மீன் பிடிக்க சென்றுள்ளன. ஏராளமான விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லாமல் துறைமுக கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப் பட்டிருந்தன.
தடைகாலம் நாளை தொடங்குவதால், ராமேசுவரம் பகுதியில் உள்ள மீனவர்கள் படகுகளில் இருந்து மீன் பிடி வலை, மடி பலகை, ஐஸ் பாக்ஸ், கயிறு உள்ளிட்ட மீன் பிடி சாதனங்களை டிராக்டர், வேன், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் மூலம் ஏற்றி வீடுகளுக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தாண்டின் மீன் பிடி தடை காலமானது வருகிற 14-ந் தேதி நள்ளிரவு 12 மணியில் இருந்து அமலுக்கு வருகிறது. அன்றிலிருந்து மீன் பிடிக்க செல்ல மீனவர்களுக்கு அனுமதி இல்லை. இந்த தடை காலம் 61 நாட்கள் நீடிக்கும், அப்போது, மீனவர்களுக்கு மீன்பிடிக்க டோக்கன் வழங்கப் படமாட்டாது என மீன்வளத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.