அமூர் ஃபால்கன் என்றழைக்கப்படும் அமூர் பருந்து என்பது ரஷ்யாவின் அமூர் பிராந்தியத்திலிருந்து ஆப்பிரிக்கா வரை ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் இடம் பெயர்ந்து பறக்கும் சிறிய பருந்தினம்.
ஓய்வின்றி பல ஆயிரம் கிலோ மீட்டர்களை கடந்து செல்லும் திறன் கொண்ட இந்தப் பருந்து பறவை ஆராய்ச்சியாளர்களை வெகுவாகக் கவர்ந்த ஒன்று.

அந்த வகையில், இந்திய ஆய்வாளர்கள் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வு நடவடிக்கையில் 6100 கி.மீ. வரை ஓய்வின்றி பறப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மணிப்பூர் காடுகளில் பிடிபட்ட மூன்று அமூர் பறவைகளின் முதுகில் செயற்கைகோள் உதவியுடன் டிராக் செய்யக்கூடிய சிப்களை பொருத்திய ஆராய்ச்சியாளர்கள் அவற்றை கடந்த வாரம் விடுவித்து தொடர்ந்து கண்காணித்தனர்.
இதில் அப்பாபாங் (ஆரஞ்சு குறி) என்று பெயரிடப்பட்ட பெரிய ஆண் பருந்து தொடர்ந்து 6 நாட்கள் 8 மணிநேரம் இடைவிடாது 6100 கி.மீ. தூரம் பறந்து ஆப்பிரிக்காவின் கென்யா நாட்டை அடைந்துள்ளது.
அடுத்ததாக வயதில் இளைய பெண் பறைவையான அலாங் (மஞ்சள் குறி) 6 நாட்கள் 14 மணிநேரத்தில் 5600 கி.மீ. பறந்துள்ளது.
![]()
அலாங் என்ற பெயர் கொண்ட இந்தப் பறவை தெலுங்கானாவில் ஒரு இரவு ஓய்வு, மகாராஷ்டிராவில் 3 மணி நேர சிறு இடைவெளி — அதன் பிறகு அரேபியக் கடலை நோக்கி பறந்தது.
மூன்றாவது பறவையான அஹு (சிவப்பு குறி) 5 நாட்கள் 14 மணி நேரத்தில் 5,100 கிமீ கடந்துள்ளது, இந்தப் பறவை மேற்கு வங்காளதேசத்தில் ஒரு இரவு ஓய்வு எடுத்த பிறகு, அரபிக் கடலை கடக்கும் பயணத்தை துவங்கியது.
இந்தப் பெரிய பெண் பறவை வடக்கு திசையைத் தேர்ந்தெடுத்ததால் ஒப்பீட்டளவில் குறைவான தூரம் பறந்து சோமாலியா நாட்டை அடைந்துள்ளது.
இந்த அமூர் பறவைகள் அனைத்தும் சோமாலியா வழியாகச் செல்வதால் இவை கென்யாவின் சாவோ தேசிய பூங்காவில் ஓய்வெடுக்க வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது.