டெல்லி: அடுத்த 8 மாதங்களுக்குள்ளாக, 600 மில்லியன் கொரோனா டோஸ்களை தர உள்ளதாக நிதி ஆயோக் உறுப்பினரும், தேசிய தடுப்பு மருந்து நிர்வாக குழு தலைவருமான வி.கே. பால் கூறி உள்ளார்.
உலகின் 200 நாடுகளில் இன்னமும் கொரோனாவின் தாக்கம் ஓயவில்லை. இந்தியாவில் தமிழகத்தில் பாதிப்பு குறைந்தாலும், மற்ற மாநிலங்களில் பாதிப்பு அதிகம் உள்ளது. எனவே, இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்துகளை அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதிக்குமாறு மருந்து நிறுவனங்கள் கோரிக்கை விடுத்து உள்ளன.
இந் நிலையில் அடுத்த 8 மாதங்களுக்குள்ளாக, 600 மில்லியன் கொரோனா டோஸ்களை தர உள்ளதாக நிதி ஆயோக் உறுப்பினரும், தேசிய தடுப்பு மருந்து நிர்வாக குழு தலைவருமான வி.கே. பால் கூறி உள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: 6 முதல் 8 மாதங்களில் நாடு முழுவதும் 600 மில்லியன் கொரோனா தடுப்பூசிகள் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த ஊசிகளை சேமிக்க 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையுடன் கூடிய குளிர்சாதன சேமிப்பு வசதிகளை அரசு ஏற்படுத்த உள்ளது.
சீரம், பாரத், சைடஸ் மற்றும் ஸ்புட்னிக் நிறுவனங்களுக்கு சாதாரண குளிர் சேமிப்பு நிலையே போதுமானது. ஆனால்,பைசரின் தடுப்பூசிக்கு பிரத்யேக சேமிப்பு நிலைகள் அவசியம். அவை ஏற்படுத்தப்படும். பல்வேறு நிறுவனங்களின் தடுப்பு மருந்தை அவசரகால பயன்பாட்டிற்காக பயன்படுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் விரைவில் ஒப்புதல் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தடுப்பூசி விலை நிர்ணயம் பற்றி அரசு பேச்சுவார்த்தைகளை நடத்தவில்லை. ஆகவே, தடுப்பூசி நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் இன்னும் பெறவில்லை என்று கூறினார்.