சென்னை
தமிழக அரசு 2 ஆம் கட்டமாக 600 மின்சார தாழ்தள பேருந்துகளுக்கு ஒப்பந்தம் கோரி உள்ளது.

காற்று மாசுப்பாட்டை கட்டுப்படுத்துவதுடன் மக்களுக்கான சொகுசு வசதிகளை அதிகரிக்கும் நோக்கில் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகமானது மின்சார பஸ்களை இயக்க நடவடிக்கை எடுத்து வருகிறது., 1225 மின்சார பஸ்களை மொத்த விலை ஒப்பந்தத்தின் அடிப்படையில் இயக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
அவற்றில், முதல்கட்டமாக 625 மின்சார தாழ்தள பஸ்கள் வியாசர்பாடி, பெரும்பாக்கம், சென்டிரல், தண்டையார் பேட்டை, பூந்தமல்லி ஆகிய 5 பணிமனைகள் மூலம் மொத்த விலை ஒப்பந்தத்தின் அடிப்படையில் இயக்குவதற்கான ஒப்பந்தங்கள் நிறைவு செய்யப்பட்டு அசோக் லேலண்ட் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஓம் குளோபல் மொபிலிட்டி நிறுவனத்தின் சார்பில், 400 ஏ.சி. அல்லாத பஸ்களும், 225 ஏ.சி. பஸ்களும் இயக்கப்பட உள்ளன.
, 2-வது கட்டமாக 600 மின்சார தாழ்தள பஸ்களுக்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றில் , 400 ஏ.சி. பஸ்களும், 200 ஏ.சி. அல்லாத பஸ்களும் அடங்கும்.
இதில், ஏற்கனவே முதல்கட்ட ஒப்பந்தத்தை கைப்பற்றி உள்ள ஓம் குளோபல் மொபிலிட்டி நிறுவனம் மற்றும் ஈவி டிரான்ஸ், ஈகிள் கன்ஸ்டிரக்ஷன், டிராவல்டைம் மொபிலிட்டி இந்தியா என்ற 4 நிறுவனங்கள் பங்கேற்று உள்ள இந்த ஒப்பந்தத்தை நிறைவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆகஸ்டு மாதத்திற்குள் ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.