சென்னை:
சென்னையில் பெய்து வரும் மழை காரணமாக மழை நீர் தேங்கியுள்ளதால், துரைசாமி சுரங்கப் பாதை உட்பட ஆறு சுரங்கப் பாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகச் சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னையில் துரைசாமி சுரங்கப் பாதை உட்பட ஆறு சுரங்கப் பாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
போக்குவரத்து மாற்றம்:
ஈ.வி.ஆர் சாலையில் சென்ட்ரல் ரயில்வே சந்திப்பிலிருந்து நாயர் சந்திப்பு நோக்கி செல்லும் வாகனங்கள் ஈ.வி.ஆர் சாலை, காந்தி இர்வீன் சந்திப்பு ( சி.எம்.டி.ஏ) வழியாக எழும்பூர் நோக்கி திருப்பி விடப்படும்.
- பேந்தியன் ரவுண்டானாவில் இருந்து ராஜரத்தினம் மைதானம் (மார்ஷ்சல் ரோடு) நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. அவ்வாகனங்கள் பேந்தியன் சாலை வழியாக செல்லலாம்.
- மார்ஷல் ரோடிலிருந்து பேந்தியன் ரவுண்டானாவை நோக்கி வாகனங்கள் வர அனுமதி உண்டு.
- ஆற்காடு சாலை 80 அடி ரோடில் இருந்து ராஜ மன்னார் சாலை செல்ல வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிவிப்பில், சென்னை நகரின் சில சாலைகளில் மழைநீர் பெருக்கு காரணமாக வாகனங்கள் மெதுவாகச் செல்கின்றன. பொதுமக்கள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்கள் பயணத்தை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.