ஸ்ரீநகர்: லடாக் எல்லை விவகாரத்தில் இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்று வந்த 6வது கட்ட பேச்சுவார்த்தையிலும் எந்தவொரு முன்னேற்றமும் கிடைக்காத நிலையில், எல்லைப்பகுதிகளில் போர் தளவாடங்களை இந்திய ராணுவம் குவித்து வருகிறது. குளிர்காலத்தை எதிர்கொள்ள தயாராகி வருகிறது.
கடுமையான குளிா் காலத்திலும் இந்திய ராணுவ வீரர்கள் போரிட தயாராக இருப்பதற்கு ஏதுவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வீரர்களுக்கு சிக் சார் 716 துப்பாக்கிகள் வழங்கப்பட உள்ளது. முதல் தொகுதி 66400 துப்பாக்கிகளுக்கு பிறகு தற்போது 73000 துப்பாக்கிகள் பெறப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி யுள்ளது.இந்த இரண்டாம் தொகுதி ஆயுதங்கள் பெற அனுமதி அடுத்த வாரம் நடைபெற உள்ள பாதுகாப்பு தளவாட கொள்முதல் கூட்டத்தில் கிடைக்கும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. சீன எல்லையை ஒட்டி சக்தி வாய்ந்த பீரங்கிகள் நிலைநிறுத்தப்பட்டு உள்ளன. இதன் மூலம், மைனஸ் 40 டிகிரி குளிரிலும் கூட தாக்குதல் நடத்த முடியும். லடாக் சீன எல்லையில் கடந்த 5 மாதங்களாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இங்கு பலமுறை சீன ராணுவம் அத்துமீறியுள்ள நிலையில், மீண்டும் அப்படியொடி நிலை ஏற்படாத வகையில், கிழக்கு லடாக்கில் உள்ள மிக உயரமான பகுதிகளுக்கு பீரங்கிகள், கனரக ஆயுதங்கள், வெடி பொருள்கள், உணவு, எரிபொருள் ஆகியவற்றை இந்திய ராணுவம் அனுப்பி வைத்துள்ளது.
சமீபத்தில், ரோடங் டனல் என்ற சுரங்க பாதை பணிகள் முடிவடைந்து உள்ளது. இதன் மூலம் இந்திய இராணுவம் எல்லையின் மிக அருகே டி-90 மற்றும் இன்பான்ட்ரி காம்பட் வாகனங்களை நகர்த்த முடியும் என்று இந்திய ராணுவம் கூறியுள்ளது. இதன் மூலம் 475கிமீ நீள மனாலி-கெய்லோங்-லே தேசிய நெடுஞ்சாலையை இனி இந்திய இராணுவ படைகள் வருடம் முழுதும் உபயோகிக்க முடியும். .9.2கிமீ நீளமுள்ள இந்த சாலை கடல்மட்டத்தில் இருந்து 3000மீ உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 4000கோடிகள் செலவிடப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 3 அன்று பிரதமர் நரேந்திர மோடி இந்த சாலையை திறந்து வைக்க உள்ளார்
இதற்கிடையில், கிழக்கு லடாக்கில் உள்ள சுஷுல், டெம்சோக் பிரிவுகள் உள்பட பல்வேறு சச்சரவுக்குரிய பகுதிகளுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் டி-90, டி-72 பீரங்கிகள், பீரங்கி ரக துப்பாக்கிகள், போா் வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. எல்லைப் பகுதி ராணுவ நிலைகள், 16,000 அடிக்கும் அதிகமான உயரம் கொண்ட மலைப் பாதைகளில் உள்ள ராணுவ வீரா்களுக்கு உடைகள், உணவுப் பொருள்கள், தொலைத்தொடா்பு சாதனங்கள், எரிபொருள் உள்ளிட்டவையும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
ஆயிரக்கணக்கான டன்களில் உணவு, எரிபொருள் மற்றும் இதர சாதனங்களை எடுத்துச் செல்வதற்கு சி-130ஜே சூப்பா் ஹொகுலிஸ், சி-17 குளோப்மாஸ்டா் உள்பட இந்திய விமானப் படையின் அனைத்து போக்குவரத்து விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டா்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
சமீபத்தில், ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவணே மற்றும் தளபதிகள் அடங்கிய குழுவினா் எல்லைப்பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு திரும்பிய பிறகு தளவாடங்கள் அனுப்பும் பணி தீவிரமடைந்து வசருகிறது. லடாக்கில் தளவாட பொருள்களை இருப்பு வைப்பதற்காக இந்திய ராணுவம் தயாராகி வருகிறது.
கிழக்கு லடாக்கில் அக்டோபா் முதல் ஜனவரி வரை மைனஸ் 25 டிகிரி வெப்பநிலை நிலவும். எனினும் சீன ராணுவத்தின் எந்தவொரு அத்துமீறலையும் எதிா்கொள்வதற்கு அங்கு கூடுதலாக 3 ராணுவ படைப் பிரிவுகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், 131 இளம் வீரர்கள் லடாக் ஸ்கௌட் ரெஜிமென்டில் இணைந்துள்ளனர்.
சமீபத்தில், எல்லை விவகாரம் குறித்து இந்திய-சீன ராணுவத்தினா் இடையே கடந்த 21-ஆம் தேதி 6-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அப்போது தொடா் நடவடிக்கைகள் மூலம் எல்லையில் பதற்றத்தை அதிகரிக்க வேண்டாம் என இருதரப்பும் ஒப்புக்கொண்டன. எனினும் சீனா தனது படைகளை வாபஸ் பெற மறுத்து வருகிறது. இதன் காரணமாக எல்லைப்பகுதிகளில் தேவையான போர்த்தளவாடங்களை இந்திய ராணுவம் குவித்து வருகிறது. வரவுள்ள குளிர்காலத்தை கருத்தில் கொண்டு தேவயான உணவுப்பொருட்கள், பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் போர்த்தளவாடங்களும் குவிக்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து கூறிய, ராணுவ மேஜர் ஜெனரல் அர்விந்த் கபூர் , ‘‘கடினமான மலைப்பிராந்திய எல்லையில், இயந்திரமாக்கப்பட்ட படைகளை இந்தியா நிறுத்தியுள்ளது. உலகிலேயே இதுபோன்ற உயரமான சவாலான பகுதிகளில் பீரங்கிகளை நிறுத்தியிருக்கும் ஒரே ராணுவம் இந்தியா மட்டுமே. இந்த பகுதியில் பீரங்கிகள், துப்பாக்கி களை பராமரிப்பது என்பது சவாலான விஷயம். இந்த குளிர்காலம், லடாக்கில் பாதுகாப்பு பணியில் உள்ள வீரர்களுக்கு சவாலாக இருக்கும் என்பது மறுக்க முடியாதது. அதை எதிர்கொள்ளத் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன,’’ என்றார்.
மேலும், பாங்காங் திசோ ஏரிப் பகுதியில் மொத்தம் 8 பிங்கர் பகுதிகள் உள்ளன. இவற்றில் 4 பகுதிகளை சீன ராணுவம் ஆக்கிரமித்துள்ளது. மற்ற பகுதிகள் இந்தியா வசம் உள்ளது. சீனா ராணுவத்திற்கு மேல் உள்ள உயரமான பகுதியில் இந்தியராணுவத்தின் வசம் உள்ளது. அங்கிருந்து சீன ராணுவ நடவடிகைககளை இந்திய ராணுவம் கண்காணித்து வருகிறது.