வாஷிங்டன்: அமெரிக்கா அதிபர் தேர்தலுடன் பிரதிநிதிகள் அவைக்கான தேர்தலும் நடைபெற்று முடிந்து, வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பிரதிநிதிகள் சபையில் ஜனநாயக கட்சி முன்னிலையில் உள்ள நிலையில், அங்குள்ள செனட்சபைக்கு கடுமையான போட்டி நிலவி வருகிறது.
இந்த தேர்தலில் இந்திய வம்சாவழியினரில் 2 தமிழர்கள் உள்பட 6 பேர் வெற்றி பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர். அவர்களில் 4 பேர் பிரதிநிதிகள் சபைக்கும், 2 பேர் செனட் சபைக்கும் தேர்வாகி உள்ளனர்.
அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் (வயது 74) மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணைஜனாதிபதி ஜோபைடன் ( வயது 77) போட்டியிடுகிறார். அதிபர் தேர்தலுடன் பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலும் நடைபெற்றது. அதன் வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன.
தற்போது வாக்கு எண்ணிக்கை இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. அங்கு அதிபர் தேர்லில் வெற்றி பெற 270 வாக்குகள் தேவையான நிலையில், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் 264 வாக்குகள் பெற்று தனது வெற்றியை உறுதி செய்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தற்போதைய அதிபர் டிரம்ப் 214 வாக்குகள் பெற்றுள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கையில் கோல்மால் நடைபெறுவதாக கூறி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டிரம்ப் தரப்பில், சில மாகாணங்களின் வாக்கு எண்ணிக்கைக்கு தடை கேட்டு வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
அமெரிக்கா நாடாளுமன்றத்தில் மொத்தம் 535 உறுப்பினர்கள் உள்ளனர். அங்கு மேல்சபை அதாவது பிரதிநிதிகள் சபை (House of Representatives) செனட் சபை ( State Senate – மாகாண சபை) என இரு அவைகள் உள்ளன. அமெரிக்காவில் பிரதிநிதிகள் சபைதான் மிகவும் வலிமை வாய்ந்தது. மாகாண சபையானது நம் இந்தியாவில் இருக்கின்ற லோக்சபா வைப்போல்.
செனட் சபைக்கு 100 செனட் உறுப்பினர்களும், பிரதிநிதிகள் சபைக்கு 435 பிரநிதிகளும் தேர்வுசெய்யப்படுவர். பிரதிநிதிகள் சபைக்கு உரிய பிரதிநிதிகள் 2 வருடங்களுக்கு ஒருமுறை தேர்வு செய்யப்படுவார்கள். செனட் சபைக்கான உறுப்பினர்கள் 6 வருடங்களுக்கு ஒருமுறை தேர்வு செய்யப்படுகிறார்கள்.
ஒவ்வொரு மாகாணத்திற்கும் 2 செனட்டர்கள் வீதம் 100 செனட்டர்கள் உள்ளனர்.
மக்கள் தொகை அடிப்படையில் ஒவ்வொரு மாகாணத்திற்கும் பிரநிதிகள் எண்ணிக்கை மாறுபடும்.
இந்த அவைகளில் இடம்பெறும் கட்சியின் உறுப்பினர்களைப் பொறுத்தே அங்கு சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்படுவது எளிமையாகும். இல்லையேல் இழுபறி நீடிக்கும்.
இந்த இரண்டுமே அவைகளுக்கான உறுப்பினர்கள் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
இந்த நிலையில் தற்போது நடந்துள்ள பிரதிநிதிகள் அவை தேர்தலில் முன்னணி நிலவரம் வெளியாகி உள்ளது.
செனட் சபை: ஜனநாயக கட்சி 48 இடங்களில் வெற்றி, குடியரசு கட்சி 48 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. செனட் சபையில் பெரும்பான்மை கிடைக்க 51 இடங்கள் தேவைப்படும் நிலையில், . இரு கட்சிகளும் சமமாக இருப்பதால், அங்கு இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
பிரதிநிதிகள் சபை: அதுபோல பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மை பெற 218 இடங்கள் தேவை. தற்போதைய நிலையில் ஜோபைடனின் ஜனநாயக கட்சி 204 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. டிரம்பின் குடியரசு கட்சி 190 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. இதனால், பிரதிநிதிகள் சபையில் பைடன் கட்சி பெரும்பான்மை பெறுவது உறுதியாகி உள்ளது.
இந்த நிலையில், இரு சபைகளின் உறுப்பினர்களுக்கு போட்டியிட்ட இந்திய வம்சாவழியினர்களில் 2 தமிழர்கள் உள்பட 6 பேர் வெற்றி பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபைக்கு ஜோபைடனின் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ராஜாகிருஷ்ணமூர்த்தி, பிரமிளா ஜெயபால் என்ற இரு தமிழர்கள் உள்பட அமிபெரா, ரோஹகன்னா ஆகிய 4 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களில் ராஜா கிருஷ்ணமூர்த்தி 3வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதுபோல, செனட்சபைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 2பேரில் நிரஷ் அன்டனி என்பவர் டிரம்பின் குடியரசுகட்சி சார்பில் ஒகியோ மாகாணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜெனிஃபர் ராஜ்குமார் என்பவர் பைடனின் ஜனநாயக கட்சி சார்பில் நியூயார்க் மாகாணத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளார்.