சென்னை:
சென்னையில் கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்தில் 6 மணி நேரமாக நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நிறைவு பெற்றது.

மாணவர்களுக்கான இதழ்கள் தயாரிப்பது உள்ளிட்ட பணிகளில் மோசடி நடைபெற்றதாக புகார்கள் எழுந்தது. இதைத்தொடர்ந்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனரின் அலுவலகம் மற்றும் அவரது வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளி கல்வித் துறை வளாகத்தில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் இயக்குனராக அறிவொளி செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக அவரது அலுவலகத்திலும் வீட்டிலும் சோதனை நடத்தி வந்தனர்.
காலை 7 மணிக்கு தொடங்கிய சோதனை பிற்பகல் 3 மணியளவில் நிறைவடைந்ததாக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், சோதனையின்போது ஏதும் கைப்பற்றப் பட்டதா என்பது குறித்து தகவல் இல்லை.
[youtube-feed feed=1]