டில்லி,

6 காங். எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு  எதிர்கட்சியினிர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

நேற்று பாராளுமன்றத்தில் பசு பாதுகாப்பு குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது, பசு பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறை கும்பல்களால் சிலர் அடித்து கொல்லப்பட்டு வருவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வந்தனர்.

அப்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சில எம்.பி.க் கள், மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து,  அவையின் மைய பகுதிக்கு சென்று கோ‌ஷமிட்டனர்.

அமளியில் ஈடுபட்ட எம்.பிக்கள்  மேஜையில் இருந்த காகிதங்களை கிழித்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மீது வீசினார்கள்.

இதையடுத்து பாராளுமன்ற சபாநாயகர்,  காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி.க்களான,  ரஞ்சித் ரஞ்சன், சுஷ்மிதா தேவ், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, கவுரவ் கோகாய், கே.சுரேஷ், எம்.கே.ராகவன் ஆகியோரை 5 நாட்கள் சஸ்பெண்ட் செய்வதாக அறிவித்தார்.

இதற்கு காங்கிரஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, சபாநாயகரின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து,  பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு எதிர் கட்சி எம்.பி.க்கள் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் துணைத் தலை வர் ராகுல்காந்தி, ஜோதிரத்யா சிந்தியா மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் இதில் பங்கேற்றனர்.

காங்கிரஸ் பாராளுமன்ற குழு தலைவர் மல்லிகார் ஜூனகார்கே இதுகுறித்து கூறும் போது, ‘‘மீராகுமார் சபாநாயகராக இருந்த போது இது போன்று நடந்தது இல்லை. அவர் எப்போதும் கோபப்பட மாட்டார். அரசின் நெருக் கடிக்கு சபாநாயகர் அடி பணியக்கூடாது.

சஸ்பெண்டு உத்தரவை திரும்ப பெற்று எம்.பி.க்களை அவை நட வடிக்கையில் ஈடுபட அனு மதிக்க வேண்டும்’’ என்றார்.