டில்லி: நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி ஷீனா போரா கொலை வழக்கு தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த தொழிலதிபர் இந்திராணி முகர்ஜிக்கு ஆறரை ஆண்டுகளுக்கு பிறகு உச்சநீதி மன்றம் ஜாமின் வழங்கி உள்ளது.
மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் செயல்பட்ட தனியார் ‘டிவி’ சேனலின் உரிமையாளரான பீட்டர் முகர்ஜியின் இரண்டாவது மனைவி இந்திராணி. இவர், தன் இரண்டாவது கணவர் சஞ்சீவ் கன்னா வாயிலாக பிறந்த மகள் ஷீனா போராவை, 2012ல் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து அவரும், அவரது மூன்றாவது கணவர் பீட்டர் முகர்ஜியும், 2015ல் கைது செய்யப்பட்டனர். அவர் பைகுல்லா சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருக்கும்போதே இருவரும் 2019ல் விவாகரத்து பெற்றனர். ஷீனா போரா கொலை வழக்கை சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இந்நிலையில் இவ்வழக்கில் இந்திராணிக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.
அவருக்கு ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம், அவர் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக காவலில் இருப்பதாகவும், சூழ்நிலை ஆதாரங்களின் அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் கூறியது. மேலும், வழக்குகளில் பாதி சாட்சிகளை அரசு தரப்பு கைவிட்டாலும், விசாரணை விரைவில் முடிவடையாது என்று கூறியுள்ளது.
இந்திராணி ஜாமீனில் விடுவிக்கப்படுவது “விசாரணை நீதிமன்றத்தின் திருப்திக்கு” உட்பட்டது. பீட்டர் முகர்ஜிக்கு விதிக்கப்பட்ட அதே நிபந்தனைகள் அவருக்கும் விதிக்கப்படும் என்று நீதிமன்றம் மேலும் கூறியது.