காத்மண்டு: உலகின் மிகப்பெரிய 5ஜி கோபுரம், எவரெஸ்ட் சிகரத்தில் நிறுவப்பட்டுள்ளது. இதற்கான 8000 கிலோ உபகரணங்கள் யாக் எருதுகளின் மூலமாக கொண்டு செல்லப்பட்டன.
இதுதொடர்பாக கூறப்படுவதாவது; 6500 மீட்டர் உயரத்தில் இந்த கோபுரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. சைனா மொபைல் ஹாங்காங் அன்ட் ஹுவே நிறுவனங்களின் ஊழியர்களால் இந்த கோபுரம் நிர்மாணிக்கப்பட்டது.
இதுவரை, இந்நிறுவனத்தின் சார்பில், எவரெஸ்ட் நிர்மாணத்தையும் சேர்த்து, 5ஜி பேஸ் ஸ்டேஷன்கள் வெற்றிகரமாக கட்டமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 6500 மீட்டர் உயரத்தில் இந்த கோபுரம் நிறுவப்பட்டுள்ளதன் மூலம், மலையேறும் வீரர்களுக்கான தகவல் தொடர்பு வசதிகள் சிறப்பான முறையில் சாத்தியப்படும்.
மொத்தம் 8 டன்கள் எடைகொண்ட உபகரணங்களை, 6500 மீட்டர் உயரத்திற்கு யாக் எருதுகள்தான் சுமந்து சென்றுள்ளன. அந்த விலங்கின் உடலமைப்பானது, கடினமான மலைப்பகுதிகளில் ஏறுவதற்கு ஏற்றது.

இரண்டு நிறுவனங்களைச் சேர்ந்த பொறியாளர்களின் குழு, அந்த கோபுரத்தை பராமரித்தல் மற்றும் இயக்குதல் பணியில் ஈடுபடும். மேலும், இந்த கோபுர நிர்மாணத்தின் மூலம், எவரெஸ்ட் சிகரத்தின் உண்மையான உயரத்தை அளக்கும் திட்டமும் சைனா மொபைல் ஹாங்காங் மற்றும் ஹுவே நிறுவனங்களுக்கு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தற்போதைய நிலையில், எவரெஸ்ட் சிகரத்தின் மொத்த உயரம் 8848 மீட்டர்கள் (29029 அடிகள்) என்று கூறப்படுகிறது. ஆனாலும், இது துல்லியமானதா? என்ற சந்தேகம் நிலவுகிறது.