வாஷிங்டன்:
ஆதார் மூலம் முறைகேடுகளை தடுத்த காரணத்தால் மத்திய அரசுக்கு 58 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மிச்சமாகி உள்ளது என்று இன்போசிஸ் செயல்சாரா தலைவர் நந்தன் நிலேகனி தெரிவித்துள்ளார்.
வாஷிங்டனில் நடந்த மின்னணு பொருளாதாரம் குறித்த உலக வங்கியின் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் பேசுகையில், ‘‘ முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் ஆதார் திட்டம் தொடங்கப்பட்டது. 2014ம் ஆண்டில் பிரதமர் மோடி தலைமையில் அமைந்த மத்திய அரசு ஆதார் திட்டத்தை தீவிரமாக அமல்படுத்தியது. இதன் மூலம் 100 கோடிக்கும் அதிகமானோருக்கு தற்போது ஆதார் கிடைத்துள்ளது.
அரசின் பல்வேறு திட்டங்களுக்கு ஆதார் கட்டாயம் ஆனதால் போலி பயனாளிகள் நீக்கப்பட்டுள்ளனர். நிதி முறைகேடுகள் தடுக்கப்பட்டுள்ளது. ஆதார் மூலம் மத்திய அரசுக்கு 900 கோடி அமெரிக்க டாலர் மிச்சமாகியுள்ளது. ரூபாய் மதிப்பில் இது 58 ஆயிரத்து 500 கோடியாகும்.
வங்கிக் கணக்கில் 50 கோடி பேர் ஆதாரை இணைத்துள்ளனர். ஆயிரத்து 200 கோடி டாலர் மதிப்பு அரசு மானியம் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.