ஜெய்ப்பூர்: ‘ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், 55வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் எரிபொருளுக்கு ஜிஎஸ்டி வரி, இன்சூரன்ஸ் பிரீமியம் மீதான ஜிஎஸ்டியை சீரமைக்கும் திட்டம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

நாடு முழுதும் தற்போது பல்வேறு பொருட்களுக்கு 5, 12 மற்றும் 18, 28 சதவீதம் என, நான்கு அடுக்குகளில் ஜி.எஸ்.டி., விதிக்கப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்ற ஜி.எஸ்.டி., சீரமைப்புக்கான அமைச்சர்கள் குழு கூட்டத்தில், ஜி.எஸ்.டி., விகிதத்தில் மாற்றத்தைக் கொண்டு வரவும்; புகையிலை பொருட்கள், பான் மசாலா மற்றும் கார்பனேற்றம் செய்யப்பட்ட குளிர்பானங்கள் உட்பட 148 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி., விகிதத்தை உயர்த்த பரிந்துரைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது. மேலும் ஒரு தரப்பினர் எரிபொருட்களின் விலையை கட்டுப்படுத்த அதையும் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வலியுறுத்தி வருகின்றனர்

இந்த பரபரப்புக்கு மத்தியில்,  இன்று (டிச.,21) ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் மத்திய  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், 55வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம்  தொடங்கி நடைபெற்று வருகிறது.  இதில் பெரும்பாலான மாநிலங்களைச் சேர்ந்த  ஜிஎஸ்டி உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த கூட்டத்தில்,   150க்கும் மேற்பட்ட பொருட்கள் மீதான வரியை மாற்றி அமைப்பது, மருத்துவ, ஆயுள் காப்பீட்டு தொகைக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிப்பது,  விமான எரிபொருளை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வருவது பற்றி இன்றைய கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும்.