லக்னோ: பாஜக ஆளும் உத்தரபிரதேச மாநிலத்தில் மதமாற்றம் தடை சட்டம் அமலில் உள்ள நிலையில், அங்கு சட்டத்தை மீறி மதமாற்றத்தில் ஈடுபட்டதாக 55 பேர் கொண்ட கும்பல்  மீது வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் இதுவரை 26 பேரை கைது செய்துள்ளனர்.

நாடு முழுவதும் ஒரு தரப்பினர் மதமாற்றத்தில் ஈடுபடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை தங்களுக்கு சாதகமாக்கி மத மாற்றம் செய்து வருகின்றனர். இதை தடுக்க பல மாநிலங்களில் மதமாற்றம் தடை சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டம் ஹரிஹர்கஞ்ச் பகுதியில் சர்ச் உள்ளது. இங்கு கட்டாய மதமாற்றம் நடப்பதாக சிலர் கூறி வந்தனர். கடந்த  40 நாளில் 90 பேரை கட்டாயமாக மதம் மாற்றியதாக அந்த பகுதியில் உள்ள இந்து அமைப்புகள் காவல்துறையினர் புகார் கொடுத்தது. இதுகுறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், மதமாற்றம் நடைபெற்றதை உறுதிப்படுத்தினர்.

இதை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க போலீஸ் டிஜிபி உத்தரவு போட்டார். அதன்படி  கோத்வாலி போலீசார் விசாரணை நடத்தி மதமாற்றத்தில் ஈடுபட்டு வந்த 55 பேர் கொண்ட கும்பலை  கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை  26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  மற்றவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த தகவலை அந்த பகுதி துணை போலீஸ் சூப்பிரண்டு(எஸ்பி) தினேஷ் சந்திர மிஸ்ரா உறுதிப்படுத்தி உள்ளார்.

பாஜக ஆளும் உ.பி.யில் மதமாற்றத்தில் ஒரு கும்பல் ஈடுபட்டு வந்த செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதமாற்றத்தில் ஈடுபடுவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாநில முதல்வர் யோகி உத்தரவிட்டுள்ளார்.