இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பெண்களின் திருமண வயது வரம்பை மீறி, 14 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார் அந்நாட்டின் 54 வயதான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர்!
பாகிஸ்தானில் பெண்களின் திருமண வயது 16 ஆக உள்ளது. அப்படி இருக்கையில், அங்கு 54 வயதான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், 14 வயது சிறுமியை திருமணம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்ட மவுலானா சலாகுதீன் என்பவருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.
அவரது மனைவி, அங்குள்ள சித்ரால் பகுதியில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் படித்துக் கொண்டிருப்பதாக தகவல் வெளியானது. ஆம், வெறும் 14 வயதான பள்ளி மாணவியை அவர் திருமணம் செய்துள்ளார்.
தன்னை விட 40 வயது குறைவான சிறுமியை, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே மணந்த செய்தி, அங்குள்ள பெண்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதுகுறித்து தொண்டு நிறுவனம் ஒன்று, காவல்துறையில் புகார் அளித்தது. இதனையடுத்து தலைமறைவான மவுலானாவை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.