சென்னை: சென்னை மாநகராட்சி வீடுகளில் உள்ள பழைய பொருட்களை  பெறுவதற்காக வாரத்தின் ஒவ்வொரு சனிக்கிழமையும் செயலாற்றி வருகிறது. அதன்மூலம்  சென்னையில் ஒரே நாளில் 53.83 மெட்ரிக் டன் பழைய பொருட்கள் அகற்றப்பட்டு உள்ளதாக அறிவித்து உள்ளது.

ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையன்று நடைபெறும் இச்சேவையை பெறுவதற்கு, பொதுமக்கள் முன்கூட்டியே பெருநகர சென்னை மாநகராட்சியின் “நம்ம சென்னை” செயலியில் (App) பதிவு செய்ய வேண்டும்.அதன்படி பதிவுசெய்தது வாயிலாக ஒரே நாளில் 53.83 மெட்ரிக் டன் பழைய பொருட்கள் பெறப்பட்டு  விஞ்ஞான முறையில் எரியூட்டி அழிக்கப்பட்டன.

சென்னையில் உள்ள வீடுகளில் இருக்கும் தேவையற்ற பொருட்கள், குறிப்பாக சோபாக்கள், மரச்சாமான்கள், மின்னணு கழிவுகள், ஆகிய பொருட்களை அகற்றுவது என்பது எளிதில் செய்து முடிக்கக் கூடிய காரியம் அல்ல. வீட்டில் உள்ள தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்த ஆட்கள் பற்றாக்குறை, நேர விரயம் போன்ற சிக்கல்கள் இருப்பது இயல்பு. பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நாள்தோறும் சராசரியாக 6,500 மெட்ரிக் டன் திடக்கழிவுகளும், 1,000 மெட்ரிக் டன் கட்டடம் மற்றும் கட்டுமான இடுபாட்டுக் கழிவுகள் அகற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொதுமக்கள் குப்பைகள் மட்டுமல்லாது, தங்களது வீட்டில் உள்ள பழைய சோஃபாக்கள், மெத்தைகள், மரச்சாமான்கள் மற்றும் உடைகளை பொது இடங்களில் கொட்டுவதைத் தவிர்த்திடும் விதமாக, பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் பொதுமக்கள் முன்கூட்டியே தரும் தகவலின் அடிப்படையில், அவர்களின் வீடுகளிலிருந்து பழைய சோஃபாக்கள், மெத்தைகள், மரச் சாமான்கள் மற்றும் உடைகள் ஆகிய திடக்கழிவுகளை அகற்றிடும் புதிய நடவடிக்கை சென்னை மாநகராட்சியால் கடந்த மாதம் 11 ஆம் தேதி அன்று தொடங்கப்பட்டது.

அதன்படி, இத்திட்டம் தொடங்கியது முதல் அக்டோபர் 11, 18, 25, நவம்பர் 1, 8, ஆகிய ஐந்து சனிக்கிழமை நாட்களில் 715 நபர்களிடமிருந்து 271.74 மெட்ரிக் டன் பழைய பொருட்கள் பெறப்பட்டு அகற்றப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, நவம்பர் 15, கடந்த சனிக்கிழமை 111 நபர்களிடமிருந்து வரப்பெற்ற தகவலின் அடிப்படையில் 53.83 மெட்ரிக் டன் பழைய பொருட்கள் பெறப்பட்டு, கொடுங்கையூரில் உள்ள எரியூட்டும் நிலையத்திற்கு எடுத்துச் சென்று விஞ்ஞான முறையில் எரியூட்டி அழிக்கப்பட்டது.

ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையன்று நடைபெறும் இச்சேவையை பெறுவதற்கு, பொதுமக்கள் முன்கூட்டியே பெருநகர சென்னை மாநகராட்சியின் “நம்ம சென்னை” செயலியில் (App) பதிவு செய்ய வேண்டும் (அல்லது) பெருநகர சென்னை மாநகராட்சியின் 1913 என்ற எண்ணிற்கு தகவல் அளிக்கப்பட வேண்டும் (அல்லது) பெருநகர சென்னை மாநகராட்சியின் மூலம் பிரத்யேகமாக வழங்கப்பட்டுள்ள 94450 61913 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு தகவலை அனுப்ப வேண்டும்.

இதன் அடிப்படையில் மாநகராட்சிப் பணியாளர்கள் பதிவு செய்த நபர்களின் வீடுகளுக்கு ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் நேரடியாகச் சென்று, பழைய சோஃபாக்கள், மெத்தைகள், மரச்சாமான்கள் மற்றும் உடைகள் உள்ளிட்ட பொருட்களை சேகரித்து பாதுகாப்பாகவும், அறிவியல் முறையிலும் அகற்றும் பணிகளை மேற்கொள்வார்கள்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.