டெல்லி: வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்று 52வது நாளாக தொடர்கிறது. இந்த நிலையில், விவசாயிகளுடன் மத்தியஅரசு இன்று 9 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக மத்தியஅமைச்சர் தோமர் தெரிவித்துள்ளார்.
வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் 50 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது. இன்று 52வது நாளாக தொடர்கிறது.
உச்சநீதி மன்றம் வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்து, இந்த சட்டம் குறித்து ஆராய, 4 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. ஆனால், குழுவினரை ஏற்க மறுத்த விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, இதுவரை 8 முறை மத்திய அரசுக்கும் விவசாயிகள் சங்கங்கள் பிரதிநிதிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சுமூக முடிவு ஏதுவும் எட்டப்படவில்லை.
இந்நிலையில் மத்திய அரசு மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளிடையே 9-ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெறும் என மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், இன்று மதியம் 12 மணிக்கு மத்திய அரசுக்கும், விவசாய சங்கங்கள் பிரதிநிதிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிவித்துள்ளார். மேலும் இதில் சுமூகமான முடிவு எட்டப்படும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.