டெல்லி: நாடு முழுவதும் 52 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக, மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சக கூடுதல் செயலர் மனோகர் அக்னானி அறிக்கை ஒன்று வெளியிட்டு உள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறி உள்ளதாவது: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி திட்டம் ஜனவரி 16ம் தேதி தொடங்கப்பட்டது. 21 நாள்களில் மட்டுமே 52,90,474 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
ஆனால் இந்த எண்ணிக்கையை எட்ட அமெரிக்கா 24 நாள்களும், பிரிட்டன் 45 நாள்களும் எடுத்துக் கொண்டன. இதன் மூலம், அதிக வேகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை நாடுகளின் வரிசையில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
இன்று மாலை 6 மணி வரை ஒரே நாளில் 3, 31,029 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் அவர்களில் யாரும் கொரோனா தடுப்பூசியால் பலியாகவில்லை என்று கூறி உள்ளார்.