மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள மெண்டோரி காட்டுப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் 52 கிலோ தங்கம் மற்றும் ரூ.15 கோடி பணம் இருந்ததைக் கண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் திகைத்தனர்.
போபாலில் உள்ள முக்கிய கட்டுமான நிறுவனங்கள் மற்றும் இடைத்தரகர்கள் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த மூன்று நாட்களாக சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த சோதனையில் கிடைத்த ஆவணங்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் வருமான வரி ஏய்ப்பு நடந்திருப்பதாகவும் இந்த நிறுவனங்களுடன் பாஜக முன்னாள் அமைச்சருக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ரதிபாத் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் ஒன்றை சோதனையிட்ட அதிகாரிகள் அதில் கட்டிக்காட்டியாக தங்கமும் கட்டுக்கட்டாக பணமும் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த பணம் மற்றும் தங்கத்தை கைப்பற்றியுள்ள அதிகாரிகள் இந்த கார் யாருடையது அது எதற்காக இங்கு நிறுத்தப்பட்டது மற்றும் அதிலிருந்த தங்கம் எங்கிருந்து வந்தது உள்ளிட்ட தகவலை சேகரித்து வருகின்றனர்.
காட்டுப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் 52 கிலோ தங்கம் மற்றும் ரூ.15 கோடி பணம் இருந்த தகவல் அந்த பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.