புதுடெல்லி: டிக்டாக் செயலிக்கு இந்தியாவில் விதிக்கப்பட்ட தடையால், அதன் டெவலப்பருக்கு நாள் ஒன்றுக்கு $500000 நஷ்டமேற்படுவதாகவும், 250 பேர் பணியிழக்கும் நிலைமை இருப்பதாகவும் பைட்டான்ஸ் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீஜிங்கின் பைட்டான்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்திய டிக்டாக் செயலி, உலகம் முழுவதும் நன்கு பிரபலமடைந்தது.
இந்தியாவில் மட்டும் இதை 300 மில்லியன் நபர்கள் பதிவிறக்கம் செய்தனர். உலகளவில் பதிவிறக்கம் செய்தவர்களின் எண்ணிக்கை 100 கோடிக்கும் மேல்.
இந்த செயலியின் மூலம், இதன் பயன்பாட்டாளர்கள், சிறப்பு அம்சங்களுடன் கூடிய சிறிய வீடியோக்களை உருவாக்கி, அவற்றைப் பிறருடன் பகிர்ந்துகொள்ள முடியும்.
ஆனால், இந்த செயலி பாலியல் தொடர்பான தூண்டுதல் நடவடிக்கைகளை அதிகரிப்பதாய் எழுந்த குற்றச்சாட்டுகளால், சென்னை உயர்நீதிமன்றம் இந்த செயலிக்கு தடைவிதிக்குமாறு அரசைக் கேட்டுக்கொண்டதையடுத்து, இந்தியாவில் இந்த செயலிக்கு தடைவிதிக்கப்பட்டது.
– மதுரை மாயாண்டி