சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை 500 சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளதாக அறிவித்து உள்ளது. அதன்படி 19ந்தேதி தேர்தலில் வாக்காளர்கள்  வாக்களிக்கும் வகையில்,18ம் தேதி சென்னையிலிந்து  சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்து உள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகளைச் சேர்ந்த 12,838 வார்டுகளுக்கு  பிப்ரவரி மாதம்  19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் சுமார் 2 கோடியே 79 லட்சத்து 56 ஆயிரம் பேர்  வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். வாக்குப்பதிவை தொடர்ந்து,  வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ந்தேதி நடைபெற உள்ளது. பின்னர், தேர்ந்தெடுக்கபட்ட உறுப்பினர்களின் பதவியேற்பும், மேயர் பதவிக்கான தேர்தலும் மார்ச் 2 ஆம் தேதி நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம்  அறிவித்துள்ளது.

இந்த நிலையில், சென்னையில் பணி நிமித்தமாக நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் தங்களது ஜனநயாக கடமையை செய்ய, சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையில் சிறப்பு பேருந்துகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் இயக்குகிறது. ஏற்கனவே  ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தபோது பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக,  அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், தற்போதும் இயக்கப்பட உள்ளது.

தேர்தலையொட்டி, ஏற்கனவே தேர்தல் நடைபெறும் பகுதிகளில் உள்ள நிறுவனங்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ள நிலையில்,  வாக்குப்பதிவுக்கு முந்தைய நாளான  18-ந்தேதி வெள்ளிக்கிழமை கூடுதலாக பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.  சென்னையில் இருந்து  2லட்சம் பேர் வெளியூர்களுக்கு பயணம் செய்யலாம்  என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ள போக்குவரத்துக்கழகம், வழக்கமாக இயக்கப்படும்  பேருந்துகளை விட கூடுதலாக 500 பஸ்களை இயக்க முடிவு செய்துள்ளது. திருச்சி, கும்பகோணம், மதுரை போக்குவரத்து கழகத்தின் பேருந்துகள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பஸ்களாக இயக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.    மேலும் பொதுமக்களின் தேவையை அறிந்து சூழ்நிலைக்கு ஏற்ப மேலும் கூடுதலாக பேருந்துகளை  இயக்கவும் தயாராக இருப்பதாகவும் போக்குவரத்து துறை அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.