பனாஜி,
ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு நேர்மையானவர்கள் மீது வீசப்பட்ட நெருப்பு குண்டு என்றும், அது அணுகுண்டை விட மோசமானது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பு, நாட்டில் உள்ள 99 சதவீத நேர்மையான மக்கள் மீது வீசப்பட்ட நெருப்பு குண்டு என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
கோவா தலைநகர் பனாஜியில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய ராகுல்காந்தி ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மோடி அறிவித்தது நேர்மையானவர்களின் மீது வீசப்பட்ட நெருப்பு குண்டு, அணுகுண்டை விட மோசமானது என்றார்.
அவர் பேசியதாவது:
கடந்த இரண்டரை ஆண்டுகால ஆட்சியில் பிரதமர் மோடி நாட்டை இரண்டாகப் பிரித்துள்ளார். அதில் ஒரு பிரிவினர் ஒரு சதவீதமே உள்ள பெரும் பணக்காரர்கள்; மற்றொரு பிரிவினர் 99 சதவீதம் உள்ள தொழிலாளர்கள், விவசாயிகள், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் உள்ளிட்டோர்.
நாட்டில் ஒரு சதவீதம் மட்டுமே உள்ள அந்த கோடீஸ்வரர்கள், தேசத்தின் மொத்த சொத்துகளில் 60 சதவீதத்தை தங்கள் வசம் வைத்துள்ளனர். இந்தியாவில் 50 குடும்பங்களைச் சேர்ந்தவர்களிடம்தான் நாட்டின் சொத்துகளில் பெரும்பகுதி உள்ளது.
இந்த நபர்கள்தான் மோடியுடன் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்கின்றனர். நான் யாரைக் குறிப்பிடுகிறேன் என்பது மக்களுக்குத் தெரியும்.

நாட்டில் ஊழலை ஒழிக்க வேண்டுமென்றுதான் காங்கிரஸ் விரும்புகிறது. இதற்காக பாஜக அரசு ஒரு சிறிய முயற்சியை மேற்கொண்டாலும் அதற்கு ஆதரவளிக்கத் தயாராக இருக்கிறோம்.
பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என்ற அறிவிப்பை, மோடி அரசு மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை என்று வர்ணிக்கின்றனர்.
ஆனால், அது நாட்டில் உள்ள 99 சதவீத நேர்மையான மக்கள் மீது வீசப்பட்ட நெருப்பு குண்டு. இதன் மூலம், மோடி நமது தேசத்தையே பற்றி எரியச் செய்துள்ளார்.
மோடி வீசியுள்ள நெருப்பு குண்டு, அணுகுண்டை விட மோசமானது. அதன் மோசமான விளைவுகள் நமது நாட்டில் பல ஆண்டுகளுக்கு நீடிக்கும்.
நாடாளுமன்றத்தில் என்னைப் பேச அனுமதிக்கவில்லை. எனவேதான் பொதுக் கூட்டத்தில் பேசி வருகிறேன் என்றார் ராகுல் காந்தி.