சென்னை:

தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, பொன்விழா கொண்டாடப்படும் என தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் அறிவித்தார்.

இந்த விழா அரசு விழாவாக நடைபெறும் என்றும்  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  110 விதியின் கீழ் முதல்வர்  இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

தமிழகத்தில் தற்போது சட்டசபை கூட்டம் கடந்த திங்கட்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது அனைத்து கட்சி உறுப்பினர்களும் விவாதம் செய்து வருகின்றனர்.

இன்று 4வது நாள் கூட்டத்தில், தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாநகராட்சி  மேயரை மக்களே தேர்வு செய்யும் வகையில் சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்தார்.

இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 110 விதியின் கீழ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வாசித்தார்.

அதில்,  “ஆளுமைத் திறம்கொண்ட தமிழ்ப் புலவர்கள் ‘தமிழ்நாடு’ என்று வாயாரப் பாடி மனதார அழைத்த நாடு, நம் தமிழ்நாடு! நம்மோடு ஆந்திரம், கர்நாடகம், கேரளம் இணைந்து, ‘பிரசிடன்சி ஆப் மெட்ராஸ்’ என்று ஆங்கி லத்திலும், சென்னை மாகாணம்’ என்று தமிழிலும் அழைக்கப்பட்டு வந்த நிலையில், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி, மாநில பிரிவினை ஏற்படுத்தப்பட்ட பிறகு, சென்னை மாகாணம் என்னும் பெயரை மாற்றித் ‘தமிழ்நாடு’ எனப் பெயர் மாற்றப்படவேண்டும் என்று அன்றைக்கு ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் அரசின் முன் 1956, ஜூலையில் கோரிக்கையினைக் தியாகி சங்கரலிங்கனார் முன்வைத்தார்.

பேரறிஞர் அண்ணா தலைமையிலான அரசு அமைந்தவுடன், 1967-ஆம் ஆண்டு அப்போதைய “சென்னை மாகாணத்திற்கு” ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்ட, சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, 1969-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ஆம் நாள் ‘தமிழ்நாடு’ என்று நமது மாநிலத்திற்கு பெயர் சூட்டப்பட்டது.

பேரறிஞர் அண்ணா  2-வது உலகத் தமிழ் மாநாட்டினையும், எம்.ஜி.ஆர் 5-வது உலகத் தமிழ் மாநாட்டினையும், ஜெயலலிதா 8-வது உலகத் தமிழ் மாநாட்டினையும் சிறப்பாக நடத்தி, தமிழின் பெருமையையும், தொன்மையை யும் உலகறிய செய்தார்கள்.

எம்.ஜி.ஆர், தமிழுக்கென்று தனிப் பல்கலைக்கழகத்தை தஞ்சாவூரில் நிறுவினார்கள். மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கத்தை தோற்றுவித்தார்.

தமிழுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையிலும், தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும், சித்திரை முதல் நாளை மீண்டும் தமிழ் புத்தாண்டாக அறிவித்தார்கள். உலக நீதி நூலான திருக்குறளை அதிக மக்கள் பேசும் சீன, அரபு மற்றும் கொரிய மொழிகளிலும், பாரதியார், பாரதிதாசன் பாடல்கள் மற்றும் ஔவையாரின்  “ஆத்திச் சூடி”” ஆகியவை சீன மற்றும் அரபு மொழிகளிலும், மொழிபெயர்த்து தமிழர்களின் பெருமைகளை உலகறியச் செய்தார்கள்.

தமிழ் அறிஞர்களை சிறப்பிக்கும் வகையில்  “முதலமைச்சர் கணினித் தமிழ் விருது‛, “தமிழ்த் தாய் விருது‛‚ தமிழ்ச் செம்மல் விருது””அம்மா இலக்கிய விருது’ போன்ற 55 விருதுகளை அறிவித்தார்.

தமிழுக்கு மேலும் மகுடம் சூட்டும் வகையில், தமிழ் மொழியின் தொன்மை, இலக்கியம், இலக்கணம் மற்றும் பண்பாடு தொடர்பான ஆய்வுகள் மேற்கொண்டு, தமிழ் மொழியின் சிறப்பினை ஆவணப்படுத்தி உலகெங்கும் கொண்டு செல்ல, அமெரிக்காவில் உள்ள ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க அரசு, 10 கோடி ரூபாய் வழங்கி உள்ளது.

வரும் ஜனவரி 14-ஆம் நாள், வரலாற்று சிறப்பு மிக்க நமது மாநிலம் ‘தமிழ்நாடு’ என்ற பெயரோடு 50-வது ஆண்டில் காலடி எடுத்து வைப்பதை முன்னிட்டு ‘தமிழ்நாடு’ பொன் விழா ஆண்டாக மாண்புமிகு அம்மாவின் அரசு கொண்டாட முடிவு செய்துள்ளது என்பதை இந்த மாமன்றத்தில் தெரிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

நம் கண் போன்ற தமிழ் மொழி மற்றும் தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் வகையில், கலை, விளையாட்டு, கட்டுரை, கவிதை, பேச்சுப் போட்டி போன்ற நிகழ்ச்சிகள் சென்னையிலும்,அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக நடத்தப்படும்.

தமிழ் ஆராய்ச்சியில் சிறந்து விளங்கும் இளம் தமிழ் ஆய்வாளர்கள் தெரிவு செய்யப்பட்டு, சென்னையில் நடைபெறும் நிறைவு விழாவில் இவர்கள் அனைவரும் சிறப்பிக்கப்படுவார்கள்.

“தமிழுண்டு, தமிழ் மக்களுண்டு – இன்பத் தமிழுக்கு நாளும் செய்வோம் நல்ல தொண்டு”  என்ற பாவேந்தரின் வரிகளுக்கேற்ப தமிழ் மொழியையும், தமிழ்நாட்டையும் கண்ணின் மணி போல தொடர்ந்து காத்து வரும் என்பதை இந்த மாமன்றத்தில் பெருமையோடு தெரிவித்துக் கொண்டு அமைகின்றேன்” என்றார்.

தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பதன் நினைவாக இந்த விழா நடக்க இருக்கிறது.