போதான், தெலுங்கானா
கொரோனா ஊரடங்கால் ஆந்திராவில் மாட்டிக்கொண்ட தனது மகனை ஒரு 50 வயதுப் பெண் ஸ்கூட்டியில் 1400 கிமீ பயணம் செய்து அழைத்து வந்துள்ளார்.
தெலுங்கானாவில் உள்ள நிஜாமாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த போதான் நக்ரில் வசிக்கும் ரசியா பேகம் என்னும் 50 வயதுப் பெண் அரசுப் பள்ளியில் ஆசிரியையாகப் பணி புரிந்து வருகிறார். சுமார் 12 வருடங்களுக்கு முன்பு இவர் கணவர் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். 17 வயதாகும் இவர் மகன் நிஜாமுதின் கடந்த வருடம் 12ஆம் வகுப்பு முடித்துள்ளார்.
மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்காக நிஜாமுதின் ஐதராபாத் நகரில் ஒரு பயிற்சி நிலையத்தில் சேர்ந்துள்ளார். இவருடைய தோழரின் தந்தை நெல்லூரில் நோய்வாய்ப்பட்டுள்ளார். எனவே தனது நண்பருடன் நிஜாமுதீன் அங்குச் சென்றுள்ளார். அப்போது தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் இவரால் எங்கும் செல்ல முடியாமல் நெல்லூரிலேயே தங்க நேரிட்டது.
இதனால் மிகவும் கவலை அடைந்த ரசியா பேகம் காவல்துறை துணை ஆணையரிடம் தனது நிலை குறித்துத் தெரிவித்து தம்மை நல்லூருக்குச் சென்று மகனை அழைத்து வர அனுமதிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்றுத் துணை ஆணையர் ஜயபால் ரெட்டி ஒரு அனுமதிக் கடிதத்தை அளித்துள்ளார்.
அந்தக் கடிதத்துடன் ரசியா பேகம் அங்கிருந்து 700 கிமீ தொலைவில் உள்ள நெல்லூருக்கு ஸ்கூட்டியில் திங்கள் காலை கிளம்பி உள்ளார். வழியில் அவரை பல காவலர்கள் தடுத்துள்ளனர். அவர்களிடம் அனுமதிக் கடிதத்தைக் காட்டி விட்டு நெல்லூருக்கு அடுத்த நாள் சென்றுள்ளார் அங்கு தனது மகனை அழைத்துக் கொண்டு உடனடியாக ஊர் திரும்பி உள்ளார்.
போக வர மொத்தம் 1400 கிமீ பயணம் செய்து மகனை அழைத்து வந்த ரசியா பேகம் புதன்கிழமை மாலை வீடு திரும்பி உள்ளார். இவர் நெல்லூரில் ஒரு நாள் கூட தங்காமல் ஸ்கூட்டியிலேயே மகனுடன் திரும்பி உள்ளார். தமக்கு உதவி செய்த காவல்துறை இணை ஆணையருக்கு நன்றியைத் தெரிவித்துள்ளார்.