டெல்லி: மருத்துவர்கள், ஊழியர்கள் உள்பட 50 பேர் இதுவரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலகளவில் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒன்பது லட்சத்தை கடந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 1.9 லட்சத்திற்கும் அதிகமானோர் குணம் அடைந்துள்ளனர்.
47,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.இந்தியாவில் இந்த வைரசால் 1965 பேர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50ஐ கடந்துவிட்டது.
இந் நிலையில் கொரோனா வைரசுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஊழியர்கள் உள்பட 50 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் இணை செயலாளர் லவ் அகர்வால் கூறி இருப்பதாவது: கொரோனா வைரஸ் பாதிப்புகள் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், இது வரை 151 நபர்கள் அதில் இருந்து மீண்டுள்ளனர்.
டெல்லி நிஜாமுதின் தப்லிக் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள், அவர்களுடன் தொடர்புடையவர்கள் என 400 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் அதிகபட்சமாக தமிழகத்தில் 173 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தானில் 11, அந்தமான் மற்றும் நிக்கோபார் 9, டெல்லி 47, புதுச்சேரி 2, ஜம்மு காஷ்மீர் 22, தெலுங்கானா 33, ஆந்திரா 67 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. அசாமில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது என்று கூறினார்.