சென்னை: 53பேரை பலி கொண்ட குவைத் அடுக்குமாடி கட்டிட தீ விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழந்துள்ளது தெரிய வந்திருப்பதாக தமிழ்நாடு அயலக வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியுள்ளார்.
குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் 53 உயிரிழந்துள்ளனர். மேலும் ஏராளமானோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்த தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்போலோர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்றும், குறிப்பாக கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.
இதனிடையே, தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வரவும், மேலும் அங்கு சிக்கியுள்ளவர்களை மீட்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த தீவிபத்தில் பலியானர்களில் 11 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் என்றும் 3 பேர் தமிழர்களும் என்றும் தகவல் வெளியாகி இருந்தது. மேலும் தீவிபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், குவைத் தீ விபத்து தொடர்பாக அயலக வாழ் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார். அயலக தமிழர் நலத்துறை எடுத்துவரும் நடவடிக்கைகளை குறித்து அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.
இதனிடையே குவைத் தீவிபத்தில் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்ததாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியுள்ளார். அதன்படி, ராமநாதபுரத்தைச் சேர்ந்த கருப்பணன், சின்னத்துரை, வீராசாமி மாரியப்பன், செஞ்சியை சேர்ந்த முகமது ஷெரீப், தஞ்சையைச் சேர்ந்த புனாஃப் ரிச்சர்டு ராய் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். அவர்களின் உடல்களை தமிழ்நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
முன்னதாக குவைத் தீ விபத்தில் பலியானவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது எக்ஸ் தளத்தில் இன்று வெளியிட்டுள்ள இரங்கலில், குவைத் நாட்டின் மங்காப் நகரில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் நேற்று ஏற்பட்ட தீவிபத்தில் 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாக வந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளானேன். உயிரிழந்தோர் அனைவரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் யாரேனும் உள்ளனரா என்ற தகவலைச் சேகரிக்கும்படி அயலகத் தமிழர் நலன் மறுவாழ்வுத்துறை ஆணையரகத்துக்கு உத்தர விட்டுள்ளேன் என குறிப்பிட்டிருந்தார்.
மேலும், இந்த தீ விபத்தில் தமிழர்கள் எவரேனும் பாதிக்கப்பட்டிருப்பின் அவர்தம் விவரங்களைப் பெற்று, அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க அயலகத் தமிழர் நலத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
உதவி எண்கள்
இவ்விபத்து தொடர்பான விவரங்களுக்கு அயலகத் தமிழர் நலத்துறையின் உதவி எண்களான +91 1800 309 3793 (இந்தியாவிற்குள்), வெளிநாடு எனில் +91 80 6900 9900, +91 80 6900 9901 என்ற இரு எண்களிலும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.