ரூ.100 கோடி நில அபகரிப்பு புகாரில் தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கரூர் மாவட்டம் தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அபகரித்ததாக வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாக பத்திரப்பதிவு செய்ததாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி அலுவலகத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் 7 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிபிசிஐடி விசாரித்து வந்தனர்.
இதனையடுத்து இந்த வழக்கில் தான் கைது செய்யப்படுவதை தவிர்க்க கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி ஜூன் 12ம் தேதி மனு தாக்கல் செய்திருந்தார்.
எம்.ஆர். விஜயபாஸ்கரின் இந்த மனு ஜூன் 25ம் தேதி விசாரணைக்கு வந்த நிலையில் இந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்ஜாமீன் மறுக்கப்பட்டதை அடுத்து எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமறைவானார். இந்த நிலையில் அவரைப் பிடிக்க ஐந்து தனிப்படைகளை அமைத்து சிபிசிஐடி போலீசார் தேடி வருகின்றனர்.