கார்ட்டூம்: சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது சூடானில் உள்ள தேசிய விலங்குகள் பூங்காவில் பல நாட்கள் உணவின்றி, உடல் மெலிந்து, நோய்வாய்ப்பட்டுக் கிடக்கும் ஐந்து சிங்கங்களின் படங்கள்.
சூடான் தலைநகர் கார்ட்டூமில் உள்ள அல்-குரேஷி பூங்காவுக்கு விஜயம் செய்த ஒஸ்மான் சாலிஹ் தனது முகநூலில் இவ்வாறு பதிவிட்டார்: “பூங்காவில் இந்த சிங்கங்களை பார்த்த போது நான் நடுங்கிப்போனேன். அவற்றின் எலும்புகள் தோலில் இருந்து துருத்திக் கொண்டிருந்தன.“ அவர் இப்போது #Sudananimalrescue என்று ஒரு ஆன்லைன் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார்.
பூங்காவில் உள்ள சிங்கங்கள் பல வாரங்கள் உணவு மற்றும் மருந்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்களில், அந்த சிங்கங்களின் பரிதாபகரமான தோற்றங்களைக் கண்கொண்டு காண முடியவில்லை. அவற்றின் சூழ்நிலையைப் பற்றிய விவரணைகள் பெரும் கலக்கத்தை உண்டு பண்ணுகிறது.
சிங்கம் என்றாலே கம்பீரம் தான். அத்தகைய தோற்றம் கொண்ட மனிதர்களையே ‘சிங்கம் போல‘ என்று உவமையாக சொல்வதுண்டு. ஆனால், அல்-குரேஷி பூங்காவில் உணவின்றி, நோயால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் ஜீவன்களைப் பார்க்கும் நெஞ்சம் பதைபதைக்கிறது.
இப்பூங்கா, கார்ட்டூம் நகராட்சியால் நிர்வகிக்கப்பட்டாலும், தனிநபர் நன்கொடைகள் மூலம் நிதியுதவி அளிக்கப்படுகிறது. ஓஸ்மானின் முகநூல் பதிவினைப் பார்த்த பிறகு, தனிநபர்கள், ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் என ஏராளமானோர் பூங்காவில் வந்து குவிந்தனர்.
உணவின்றி, நோய்வாய்ப்பட்டு நலிந்த நிலையில் இருந்த ஐந்து சிங்கங்களில் ஒன்று இறந்தே போனது. தற்போது எஞ்சியிருக்கும் இந்த ஜீவன்களைக் காப்பாற்ற உதவிகள் வர ஆரம்பித்துள்ளதாக வந்த தகவல் சற்று ஆறுதல் அளிக்கிறது.
சூடானில் தற்போது அதிகரித்து வரும் உணவுப்பொருட்களின் விலை, வெளிநாட்டுப் பண பற்றாக்குறை ஆகியவற்றால் கடும் பொருளாதார நெருக்கடி நிலவிவருகிறது. ஆகையால், பூங்காவில் உள்ள விலங்குகளை சரியான முறையில் பாதுகாக்க இயலாமல் இருக்கிறது என்பது தெரிய வருகிறது.