ஜெய்ப்பூர்:

குடும்பக்கட்டுப்பாடு செய்பவர்களுக்கு 4ஜி போன் மற்றும் புடவை பரிசாக வழங்கப்படும் என்று ராஜஸ்தான் மாநில அரசு அறிவித்து உள்ளது.

இதன் காரணமாக மக்கள் போட்டிப்போட்டுக்கொண்டு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து வருகின்றனர்.

உலக மக்கள் தொகையில் சீனாவுக்கு அடுத்த நிலையில் இருக்கும் இந்தியா விரைவில் சீனாவை  மிஞ்சி முதல் இடத்தை பிடிக்கும் என்று ஐ.நா. அறிவித்துள்ளது.

இதற்கிடையில், மக்கள் தொகையை குறைக்கும் பொருட்டு, ராஜஸ்தான் அரசு குடும்ப கட்டுப்பாடு செய்பவர்களுக்க 4ஜி போன், புடவை பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்தது.

இதையடுத்து முதன் முதலாக ஜெய்ப்பூரில் உள்ள ஜலாவார் மாவட்டத்தில்,  குடும்பக் கட்டுப்பாடு செய்பவர்களுக்கு 4ஜி போன் மற்றும் புடவைகள் பரிசாக அளிக்கப்பட்டது.

தற்போது இந்த திட்டம் மாநிலம் முழுவதும் செயல்படுத்த அரசு முயன்று வருகிறது. ஏற்கனவே ராஜஸ்தான் மாநிலத்தில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த  மாவட்ட அளவில்  திட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

ஒவ்வொரு மாவட்டமும் தங்கள் இலக்கை அடைய போட்டிப் போட்டு செயல்பட்டு வருகிறது.  குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக இந்த பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் 4ஜி போன் அறிவிப்புக்காக பலர்  குடும்பக் கட்டுப்பாடு செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த பரிசு திட்டம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஜெய்ப்பூர்  மாவட்டத்தில் இதுவரை  8 ஆயிரத்து 410 பேர் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இது  நிர்ணயிக்கப்பட்ட அளவை விட 102 சதவீதம் அதிகமாகும்.  இந்த குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையில் 270 ஆண்களும்  வாசெக்டமி அறுவை சிகிச்சை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.