சென்னை: அதிமுக 49-வது ஆண்டு தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதையொட்டி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணைமுதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.
இதையடுத்து, தொண்டர்களிடையே பேசியவர், அதிமுக தொண்டர்களுக்கு 49வது ஆண்டு தொடக்க விழா நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும், அதிமுக பொன்விழா ஆண்டிலும் அம்மாவின் அரசாட்சியே தொடர்ந்தது என்ற வரலாற்றை படைப்போம், வாகை சூடுவோம் என கூறினார்.
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திம் கடந்த 1972ஆம் ஆண்டு அக்.17ம் தேதி எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. தமிழகத்தின் பிரதான கட்சியாக விளங்கும் அதிமுக இன்று, 49 ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதனை தமிழகம் முழுவதிலும் உள்ள அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது சொந்த ஊரான வேலூர் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் அதிமுக கொடியேற்றி வைத்தார். அந்த நிகழ்ச்சியில் அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர். இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் இருக்கும் அதிமுக தலைமை செயலகத்தில் தமிழக துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் அதிமுக கொடியேற்றினார்.
அதிமுகவின் 49-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் அதிமுக கொடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்றி வைத்தார். தாயார் மறைவால் சொந்த ஊரில் முகாமிட்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் சிலுவம்பாளையத்தில் கட்சி கொடியை ஏற்றினார். சிலுவம்பாளையம் பேருந்து நிலையம் அருகே முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி விட்டு, கட்சி கொடியேற்றினார்.
தமிழகத்தின் பிரதான கட்சியும், இந்திய நாடாளுமன்றத்தில் 3 வது முக்கிய பெரிய கட்சியுமான அ.தி.மு.க., தனது 49 வது ஆண்டில் இன்று அடி எடுத்து வைக்கிறது. பேரறிஞர் அண்ணாவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட எம்.ஜி.ஆர், தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டு, அதன் வெற்றிக்காக பாடுபட்டார். அண்ணாவின் மறைவை அடுத்து வந்த கருணாநிதி தலைமையை கேள்வி கேட்டதால், கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதன்காரணமாக1972 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி “அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்” என்ற பெயரோடு புதிய கட்சியை துவக்கினார். கட்சி துவங்கிய 8 மாதத்தில் 1973 -ல் திண்டுக்கல் நாடாளுமன்றத் இடைத்தேர்தலை எதிர்கொண்டது அ.தி.மு.க. அதன் பின், 1977-ல் தனது முதல் சட்டமன்ற தேர்தலை சந்தித்து, 127 இடங்களில் முத்திரை பதித்து ஆட்சி அமைத்தது.
1980 மற்றும் 1984-ல் நடந்த சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று தி.மு.க.வை தவிடு பொடியாக்கியது அ.இ.அ.தி.மு.க. இதில், 1982 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சத்துணவுத் திட்டம், இன்றளவும் குழந்தைகளுக்கு அன்னமிட்டு வருவது சிறப்பு.
1984- சட்டமன்ற தேர்தலின் போது, அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார் எம்.ஜி.ஆர். அந்நேரத்தில், அ.இ.அ.தி.மு.க. வை வெற்றி பெற வைக்க பொறுப்பெடுத்து, அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு தயாராக்கினார் ஜெயலலிதா.
எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பிறகு, கட்சியை ஒருங்கிணைத்து 1991 நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில், அ.இ.அ.தி.மு.க. வெற்றி பெற்று மீண்டும் அரியணை ஏறியது.
2001-ல் 132 இடங்களை கைப்பற்றி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. இதற்கு சிகரம் வைத்தார்போல் 2011 மற்றும் 2016 -ல் ஜெயலலிதா தலைமையில் களம் கண்ட அ.இ.அ.தி.மு.க., சிறப்பான ஆட்சியால் தொடர் வெற்றிகளை பதிவு செய்தது.
கடந்த 2016-ல் முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் திடீர் மறைவால், மீண்டும் அ.தி.மு.க. வில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டது. இம்முறையும் அ.தி.மு.க.வின் கதை முடிந்தது என விமர்சிக்கப்பட்ட நிலையில், உடைந்த அதிமுக ஒன்றிணைந்து, ஆட்சியை தொடர்ந்தது. தற்போது, 49 வது ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்துள்ளது.
அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுகவின் பொன்விழா எப்படி இருக்கப்போகிறது என்பது விரைவில் தெரிய வரும்.