புதுடெல்லி: கொரோனா காலத்தில், இந்திய மக்கள்தொகையில் 46% பேர் வரை, தங்களின் குடும்பச் செலவுகளுக்கு கடன் வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

நாட்டின் 7 நகரங்களில் மொத்தம் 1000 பேரிடம் மேற்கொண்ட ஆய்வில் இத்தகவல் பகிரப்பட்டுள்ளது.

கொரோனா முடக்கம் காரணமாக, வேலையிழப்பு, ஊதியக் குறைப்பு, ஊதியம் நிறுத்தி வைப்பு உள்ளிட்ட காரணங்களால் மக்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக, கீழ் மத்தியதர வர்க்கத்தைச் சார்ந்த மக்களின் பாதிப்பு மிக அதிகம்.

மேலும், இந்தக் கொரோனா முடக்கத்தால், வங்கிகள் மற்றும் இதர நிதி அமைப்புகளிடமிருந்து மாத தவணையாக செலுத்தும் வகையில் கடன் வாங்கியவர்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவும், அவர்கள் தங்களின் குடும்பச் செலவுகளை கவனிப்பதற்காக கடன் வாங்கும் நிலைக்கு அவர்களைத் தள்ளியுள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது.

மொத்த எண்ணிக்கை 46% இல் 27% இந்த வகையைச் சேர்ந்தவர்கள். அதேசமயம், வேலையிழப்பால் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டவர்கள் 14% என்று கூறப்பட்டுள்ளனர்.