ஐதராபாத்:
ஐதராபாத்தில் சட்டவிரோதமாக மருத்துவமனையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 46 வாடகை தாய்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ளது சாய் கிரன் செயற்கை கருவூட்டல் தனியார் மருத்துவமனை. இந்த மருத்துவமனை மீது எழுந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட மருத்துவ அதிகாரிகளின் பரிந்துரையின் பேரில் இன்று காவல் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருந்த வாடகை தாய்கள் 46 பேரை காவல்துறையினர் மீட்டனர். டில்லி, நாகாலாந்து, டார்ஜிலிங், தெலுங்கானா மற்றும் ஆந்திராவை சேர்ந்த ஏழை பெண்களை ஏமாற்றி வாடகை தாய்களாக மாற்றியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும் அவர்கள் ஒன்பது மாத காலம் மருத்துவமனையில் தான் தங்க வேண்டும் என்றும் வெளியில் எங்கும் செல்ல கூடாது என மருத்துவமனை நிர்வாகம் வற்புறுத்தியதும் விசாரணையில் தெரிய வந்தது. இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மருத்துவமனை செயற்கை கருவூட்டல் சிகிச்சை அளிக்க முறையான லைசென்ஸ் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது