சென்னை: நாகூர் தர்காவின் கந்தூரி சந்தனக்கூடு திருவிழாவிற்கு 45 கிலோ சந்தனக்கட்டைகளை கட்டணமின்றி வழங்குவதற்கான அரசாணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், நாகூர் தர்கா பெரிய ஆண்டவர் சுந்தூரி சந்தனக்கூடு திருவிழாவிற்கு 45 கிலோ சந்தனக் கட்டைகளை தமிழ்நாடு அரசு கட்டணமின்றி வழங்குவதற்கான அரசாணையினை நாகூர் தர்கா நிர்வாகத்திடம் வழங்கினார்.

நாகூர் தர்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்தூரி திருவிழாவிற்கு தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் கோரிக்கையினை ஏற்று, தமிழ்நாடு அரசு வனத்துறையில் இருப்பில் உள்ள சசந்தனக்கட்டைகளை நாகூர் தர்காவிற்கு கட்டணமின்றி வழங்கி வருகின்றது. 2023-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாகூர் தர்கா கந்தூரி திருவிழாவினை முன்னிட்டு சந்தன கட்டைகளை கட்டணமின்றி வழங்கும்படி தமிழ்நாடு வக்ஃப் வாரியம், தமிழ்நாடு அரசிடம் வைத்த கோரிக்கையினை பரிசீலனை செய்த முதலமைச்சர் கந்தூரி திருவிழாவிற்கு தேவைப்படும் 45 கிலோ சந்தனக் கட்டைகளை நாகூர் தர்காவிற்கு கட்டணமின்றி வழங்குவதற்கான ஆணையினை வழங்கினார்.

இந்த நிகழ்வில், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான்,  சற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ ஆகியோர் உடனிருந்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.