ஹைஃபா: இஸ்ரேல் நாட்டிலுள்ள 2 லட்சம் நபர்கள் வாழக்கூடிய நே பிரேக் என்ற நகரின் மக்கள்தொகையில், 40% பேரை கொரோனா வைரஸ் பீடித்துள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக கூறப்படுவதாவது; நே பிரேக் நகரம் யூத பழமைவாதிகள் அதிகம் வாழும் நகராகும். அவர்கள் இணையம் உள்ளிட்ட நவீன வசதிகளைப் பயன்படுத்துவது குறைவு என்பதால், கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு இல்லை. இதனால், இவர்கள் மத்தியில் அந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யகு கூறும்போது, “இஸ்ரேலில் மிகக் குறைந்த எண்ணிக்கையில்தான் கொரோனா பாதிப்பு உள்ளது. ஆனால், நே பிரேக்கில் அப்படியில்லை. அவர்கள் மூலமாக கொரோனா தொற்று இஸ்ரேல் முழுவதும் பரவுவதை அனுமதிக்க முடியாது. அதனால் அந்நகரை முடக்குகிறோம்” என்றார்.
இந்நிலையில், நே பிரேக் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. நகரில் இருந்து மக்கள் வெளியேறாமல் தடுக்க, நகரைச் சுற்றிலும் அந்நாட்டு காவல்துறையினரும் ராணுவத்தினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.