மங்களூர்:

பிறந்து 40நாளே ஆன பச்சிளங்குழந்தையை காப்பாற்றும் நோக்கில் 4 மணி நேரத்தில் 360 கி.மீட்டர் தூரத்தை அடைந்தது தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ். இது தொடர்பான வீடியோ  வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆம்புலன்ஸ் டிரைவருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

கர்நாடக மாநிலம் மங்களூரில் பிறந்து 40நாளே ஆன பச்சிளங்குழந்தைக்கு இதய பாதிப்பு உள்ளது தெரிய வந்தது. அந்த பிஞ்சுக் குழந்தையின் உயிரை காப்பாற்ற உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய  சூழல் ஏற்பட்டது. இதற்கான வசதி மங்களூரில் இல்லாத நிலையில், பெங்களூருவில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதற்காக வென்டிலேட்டர் பொருத்தப்பட்ட ஆம்புலனஸ் தயார் செய்யப்பட்டுள்ளது. ஆனால், குழந்தையை குறிப்பிட்ட நேரத்திற்குள் மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

ஆனால், சாதாரணமாக 360 கி.மீ. தூரத்தை கடக்க 6 மணி நேரத்திற்கும் அதிகமாக  நேரம் ஆகும் நிலையில், எந்தவித தடங்களுமின்றி ஆம்புலன்ஸ் செல்ல, மருத்துவமனை நிர்வாகம் சார்பில்  காவல்துறை உதவி கோரப்பட்டது.

இதை சவாலாக ஏற்ற கர்நாடக காவல்துறையினரும், உடனடியாக ஆம்புலன்ஸ் செல்லும் சாலையில் உள்ள அனைத்து காவல் நிலையம் மற்றும் போக்குவரத்து காவலர்களுக்கு தகவல் அளித்து, ஆம்புலன்ஸ் வரும்போது எந்தவித இடைஞ்சலும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தது.

இதைத்தொடர்ந்து, பச்சிளங்குழந்தையை ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸ் மங்களூரு மருத்துவமனையில் இருந்து புறப்பட்டது. அந்த ஆம்புலன்ஸ்சுக்கு முன்னும், பின்னும் மேலும் இரு வாகனங்களும் சென்றது.

மின்னல் வேகத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டிய டிரைவர்

மின்னல் வேகத்தில் சேசிங் செய்துகொண்டு சென்ற அந்த ஆம்புலன்ஸ் சைரன் சத்தம் கேட்டதும், நெடுஞ்சாலை யில், சென்ற வாகனங்கள் மட்டுமின்றி பொதுமக்களும் வழிவிட்டு ஒதுங்கி நின்று, ஆம்புலன்ஸ் செல்லும் வேகத்தை தங்களது மொபைல் போனில் படம் எடுத்தும், உற்சாகப்படுத்தியும் வாழ்த்து தெரிவித்தனர்.

மதியம் 12.05 மணிக்கு மங்களூரு மருத்துவமனையில் இருந்து புறப்பட்ட ஆம்புலன்ஸ் சரியாக மாலை 4.35 மணி அளவில் பெங்களூருவில் உள்ள ஜெயதேவ் மருத்துவமனையை சென்றடைந்தது.

இதன் காரணமாக ஆம்புலன்ஸ் சுமார்  360 கி.மீட்டர் தூரத்தை 4.30  மணி  நேரத்தில் கடந்து, பச்சிளங்குழந்தையை பத்திரமாக பெங்களூரு மருத்துவமனையில் சேர்த்து, குழந்தையின் உயிரை காப்பாற்றியது.

மங்களுரிலிருந்து பெங்களுருக்கு, வளைவு நெளிவான பாதைகளில் ஆம்புலன்சை கவனமாக ஓட்டிய டிரைவரின் கெட்டிக்காரத்தனம், கடினமான உழைப்பு.. வழிநெடுக காலியாக்கப்பட்டு சாலைகள், பிரார்த்தனை யோடு வழியனுப்பி வைத்த மக்கள் ஆகியோரின் முயற்சியால், இந்த முயற்சி வெற்றிகரமாக நடந்தேறியது…

பரபரப்பாக நடைபெற்ற இந்த சம்பவம் கர்நாடக மாநிலம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மின்னல் வேகத்தில் ஆம்புலன்சை ஓட்டிச்சென்ற, அதன் டிரைவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன….

இதில் சிறப்பம்சம் என்னவென்றால், , இந்த ஆம்புலன்சை, அநாயசமாக ஓட்டிச்சென்ற டிரைவர், தனது சேவைக்காக ஊதியம் வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். அவருக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்து கவுரவித்தனர்.

பச்சிளங்குழந்தையுடன் ஆம்புலன்ஸ் செல்லும் திக் திக் விநாடிகள்….. வீடியோ

வீடியோ உதவி: The New Indian Express