டில்லி

பாஜக தலைவர் அமித்ஷா நேற்று ராஜ்யசபையில் தனது கன்னிப் பேச்சை நிகழ்த்தினார்.

நேற்று நடந்த ராஜ்யசபைக் கூட்டத்தில் பாஜக தலைவர் அமித்ஷா தனது கன்னிப் பேச்சில் விவசாயிகள் பிரச்னை, ஜி எஸ் டி, பெண்கள் நலன், “டீக்கடை மற்றும் பக்கோடா பிரச்னை” கழிப்பறைகள், மின்சார உற்பத்தி உட்பட பலவற்றையும் பற்றி பேசி உள்ளார்.     சுமார் ஒன்றரை மணிக்கும் மேல் நிகழ்ந்த அவர் உரையின் போது எந்தவித குறுக்கீடும் இன்றி தொடர்ந்து பேசினார்.   இந்த நீண்ட உரைக்காக 4 காரணங்களை “இந்தியா டுடே” ஆங்கில நாளிதழ் தெரிவித்துள்ளது

1.       கன்னிப் பேச்சு :

அமித்ஷா கடந்த 2017ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் ராஜ்யசபை உறுப்பினரக தேர்ந்தெடுக்கப்பட்டார்.   கடந்த குளிகாலத் தொடரின் போது அவர் முதல் முறையாக ராஜ்யசபை கூட்டத்தில் கலந்துக் கொண்டார்.  ஆனால் அந்த தொடர் முழுவதும் அவர் எதுவும் பேசவில்லை. இதுவே அவருடைய முதல் உரையாகும்   பொதுவாகவே எந்த ஒரு உறுப்பினரும் தனது முதல் உரையை நிகழ்த்தும் போது யாரும் குறுக்கிடுவது கிடையாது.   எனவே அவர் நீண்ட உரையாற்றி உள்ளார்

2.       குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி :

குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் கீழ் அமித்ஷா தனது கன்னி உரையை நிகழ்த்தி உள்ளார்.    அதனால் அவர் தனது உரையில் பலவற்றை பற்றியும் பேச முடிந்தது.   ஏதாவது ஒரு குறிப்பிட்ட விவகாரம் பற்றிப் பேசினால் அந்த உறுப்பினர் மற்ற விவகாரங்களைப் பற்றி எதுவும் கூற முடியாது.  அதனால் ராகுல் காந்தி, மற்றும் ப சிதம்பரம் ஆகியோரின் விமர்சனத்துக்கும் அவரால் தனது கன்னிப் பேச்சில் பதில் அளிக்க முடிந்தது.

3.       முன்னுரிமை :

ஒரு புதிய உறுப்பினருக்கு அமித்ஷாவுக்கு அளித்த அளவுக்கு உரிமை அளிப்பதில்லை.   அவர் பாஜக தலைவர் என்பதால் அவர் பேச்சுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.    அதனால் அவரால் நீண்ட நேரம்  உரையாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளது.

4.       முன்னிலை அதிகாரம்.  :

அமித்ஷா குடியரசுத் தலைவர் உட்சிக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் இயற்றிய போது துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு அவை முன்னவராக இருந்தார்.   வெங்கையா நாயுடு பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மோடி அரசின் முன்னாள் அமைச்சரும் ஆவார்.   அதனால் அவர் அமித்ஷாவின் நீண்ட பேச்சை அனுமதித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.   பாஜக  அல்லாத வேறொரு கட்சியை சேர்ந்தவர் அவை முன்னவராக இருந்திருந்தால் அமித்ஷாவுக்கு நீண்ட உரையாற்ற வாய்ப்பு கிடைத்திருக்காது என கூறப்படுகிறது.