சென்னை: முதல்வர் ஸ்டாலின், சட்டப்பேரவையில், கொலை சம்பவங்கள்  இனி நடைபெறாது என  கூறிய நாளிலேயே , 4 கொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ளது என எதிர்க்கட்சி தலைவர்  எடப்பாடி பழனிசாமி  பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.

திமுகஅரசு,  தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க  தவறிவிட்டது என்றும், தொகுதி மறுவரையறை செய்வது குறித்து முதலமைச்சர் ஒரு ஷோ காண்பித்துக் கொண்டிருக்கிறார் என்றும்   குற்றம் சாட்டினார்.

தமிழ்நாடு சட்டப் பேரவையில் நேற்றைய கேள்வி நேரம் முடிந்த பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு குறித்து, ஒரே நாளில் 4 கொலை சம்பவங்கள் நடைபெற்றது குறித்த  பேச முயன்றார். ஆனால், அசபாநாயகர் அப்பாவு அனுமதிக்கவில்லை. மக்கள் பிரச்சினைகளை பேசுவதற்கு பேரவையில் வாய்ப்பு அளிக்கவில்லை என்றால் எதற்காக உள்ளே இருக்க வேண்டும் எனக் கூறி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய  எடப்பாடி பழனிசாமி, சட்டப் பேரவையில் மக்கள் பிரச்னைகள் குறித்து நேரமில்லா நேரத்தில் பேசுவதற்கு எதிர்க் கட்சித் தலைவருக்கு உரிமை உள்ள போது, அந்த உரிமை தற்போது மறுக்கப்படுகிறது.

சட்டப்பேரவையில் திருநெல்வேலியில் நடைபெற்ற ஜாகிர் உசேன் படுகொலை சம்பவம் குறித்து நேற்று நான் பேசியபோது, இனி தமிழகத்தில் கொலை சம்பவங்கள் நடைபெறாது என்றும், அதற்கு முன்னதாகவே நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக முதலமைச்சர் விளக்கம் அளித்தார்.

ஆனால், அவர் விளக்கம் அளித்த தினமான அன்றே (மார்ச் 19ந்தேதி) தமிழ்நாட்டின்  ஈரோடு, சேலம், மதுரை, சிவகங்கை ஆகிய இடங்களில் நான்கு கொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

இந்த சம்பவங்கள் குறித்து பேரவையில் பேசுவதற்கு அவை தலைவர் அனுமதி தரவில்லை. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்னையை சரி செய்யாமல் திமுக அரசு கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. கொலை சம்பவங்களை ஒப்பிடக்கூடாது: குற்றம் நடந்தால் கைது செய்வோம் என்று கூறுவதற்கு அரசாங்கம் எதற்கு இருக்கிறது.

திருநெல்வேலியில் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி, தனக்கு கொலை மிரட்டல் இருப்பதாகவும், உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் மூன்று மாதமாக தொடர்ந்து புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து விட்டு, புகார் அளித்த வரையே காவல்துறை அதிகாரிகள் அழைத்து கட்டப் பஞ்சாயத்து செய்தது போன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

யார் வேண்டுமானாலும் என்னுடைய அறைக்கு நேரடியாக வந்து புகார் அளிக்கலாம் என தமிழக முதலமைச்சர் சொல்லி வந்த நிலையில், திருநெல்வேலி ஜாகிர் உசேன் அளித்த புகார் மனு மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து நான் அளிக்கும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் திசை திருப்பும் நோக்கத்திலேயே தமிழக முதலமைச்சர் செயல்படுகிறார். கடந்த கால ஆட்சியுடன் ஒப்பிட்டு கொலைகளின் எண்ணிக்கையை குறைத்து பேசுவதற்கு எதற்கு ஒரு அரசு இயங்க வேண்டும்.

நிதிநிலை அறிக்கையை தான் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிட்டு பேசுவார்களே தவிர, கொலை விவரங்களை கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிட்டு பேசுவது ஒரு அரசுக்கு அழகல்ல. மேலும் தமிழகத்தில் நடைபெறும் கொலைகளை தடுப்பதற்கு என்ன நடவடிக்கைகளை ஆளும் திமுக அரசு எடுத்துள்ளது என்று இதுவரையில் தமிழக முதலமைச்சர் பதிலளிக்கவில்லை.

தொகுதி மறுவரையறை செய்வது குறித்து நாடாளுமன்றத்தில்தான் அழுத்தம் தர வேண்டும். இது குறித்து ஆலோசனை நடத்துவது எவ்விதத்திலும் பயன் தராது. முதலமைச்சர் ஒரு ஷோ காண்பித்துக் கொண்டிருக்கிறார்.

தமிழகத்தில் நடைபெறும் கொலை, ஊழல் போன்ற சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மறைக்கவே தொகுதி மறு வரையறை விவகாரத்தை திமுக அரசு கையில் எடுத்து உள்ளது.

நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டார்களா?

டாஸ்மார்க் விவகாரத்தில் திமுக அரசும், அமைச்சரும் தவறு செய்த காரணத்தினால் அவர்கள் பதற்றத்தில் இருக்கின்றனர். டாஸ்மாக் கடைகளில் ஒவ்வொரு பாட்டிலுக்கும் பத்து ரூபாய் கூடுதலாக வசூல் செய்வது குறித்தும், அதிகாரிகளுக்கு தெரிந்துதான் இந்த வசூல் நடைபெறுவதாக டாஸ்மார்க் பணியாளர் ஒருவர் பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் ஆதாரங்களுடன் வைரல் ஆகி வருகிறது.

இவ்வாறு கூறினார்.