டெல்லி: டெல்லி போலீசார் இன்று (23-10-2025) அதிகாலை நடத்திய என்கவுண்டரில் சிக்மா கும்பலைச் சேர்ந்த பிரபல ரவுடிகள் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பீகாரில் தேர்தல் நேரத்தில் கலவரம் செய்ய திட்டமிட்டிருந்ததாக கூறப்படும், பீகார் மாநிலத்தின் சிக்மா’ கும்பலை’ச் சேர்ந்த 4 ரவுடிகள் டெல்லி ரோஹினி பகுதியில் தங்கியி ருப்பதாக கிடைத்த தகவல்களை த்தொடர்ந்து, அவர்களை சுற்றி வளைத்த டெல்லி போலீசார் மற்றும் பீகார் போலீசார், அவர்கள் 4 பேரையும் என்கவுண்டர் செய்தனர்.
கொல்லபட்ட ரவுடிகள் குண்டர்கள் ரஞ்சன் பதக் (வயது 25), பிம்லேஷ் மஹ்தோ (வயது 25), மணீஷ் பதக் (வயது 33) மற்றும் அமன் தாக்கூர் (வயது 21) என அடையாளம் காணப்பட்டனர்.

இந்த கும்பலைச் சேர்ந்த பிகாரின் பிரபல ரவுடியான ரஞ்சன் பதக் கார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக வன்முறையை அரங்கேற்ற சதித் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை தகவல் அளித்துள்ளது. இதனடிப்படையில், பிகார் காவல்துறையினரும் டெல்லி குற்றப்பிரிவு காவல்துறையினரும் அவர்களை தேடி வந்த நிலையில், அவர்கள் டெல்லி ரோகினி பகுதியில் இருந்தை அறிந்து அங்கு சென்றனர்.
இன்று அதிகாலை 2.20 மணியளவில் காவல்துறையினர் டெல்லி ரோஹினி பகுதியில் சந்தேகத்தின் பேரில் சிலரை சோதனை செய்துள்ளனர். அப்போது, காவல்துறையினர் மீது நான்கு ரவுடிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அதற்கு காவல்துறையினரின் நடத்திய பதில் தாக்குதலில் ரஞ்சன் பதக், பிம்லேஷ் சாஹ்னி (25), மனிஷ் பதக் (33), அமன் தாக்குர் (21) ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர். நால்வரையும் ரோஹினி மருத்துவமனைக்கு காவல்துறையினர் கொண்டு சென்ற நிலையில், அவர்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
என்கவுண்டரில் கொல்லப்பட்ட நான்கு பேரும் பிகாரில் கொலை, ஆயுதக் கடத்தல் உள்பட பல வழக்குகளில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் என டெல்லி குற்றப்பிரிவு துணை ஆணையர் சஞ்சீவ் யாதவ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, என்கவுண்டர் நடத்தப்பட்ட இடத்தை டெல்லி மற்றும் பிகாரைச் சேர்ந்த மூத்த காவல்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
என்கவுண்டரைத் தொடர்ந்து, அந்தப் பகுதி சுற்றி வளைக்கப்பட்டு, ஆதாரங்களை சேகரிக்க தடயவியல் குழுக்கள் வரவழைக்கப்பட்டன. கும்பலின் மீதமுள்ள வலையமைப்பையும் அவர்களின் சாத்தியமான தொடர்புகளையும் கண்டறிய விசாரணை நடந்து வருகிறது.
என்கவுண்டரில் கொல்லப்பட்ட மணிஷ் பதக் (33) மீது பீகாரின் சீதாமர்ஹி மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில் நடந்த ஐந்து பெரிய கொலைகள் உட்பட எட்டு குற்ற வழக்குகளில் அவர் தேடப்பட்டு வந்தார். ரஞ்சன் பதக்கை கைது செய்தால் ரூ.25,000 பரிசு என காவல்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. இதனால் கோபமடைந்த ரஞ்சன் பதக் காவல்துறையினருக்கு சவால் விடுத்தான்.
பதக் சமூக ஊடகங்கள் மற்றும் ஆடியோ செய்திகள் மூலம் போலீசாருக்கு வெளிப்படையாக சவால் விடுத்து வந்ததாக டெல்லி காவல்துறை வட்டாரம் ஒன்று தெரிவித்துள்ளது. சமீபத்தில் மீட்கப்பட்ட ஆடியோ கிளிப், பீகாரில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அந்தக் கும்பல் தீட்டி வந்த ஒரு பெரிய சதித்திட்டத்தின் விவரங்களை வெளிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
சிக்மா கும்பல் கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளாக தீவிரமாக செயல்பட்டு வருகிறது, மேலும் பீகாரில் போலீஸ் நடவடிக்கையைத் தவிர்க்க டெல்லியில் மீண்டும் ஒன்றுகூடி வருவதாகக் கூறப்படுகிறது. நடவடிக்கைக்கு முன்பு பல நாட்களாக போலீசார் அவர்களின் நடமாட்டத்தைக் கண்காணித்து வந்த நிலையில், இன்று அதிகாலை அவர்களுக்கு டெல்லி போலீசார் முடிவுரை எழுதி உள்ளனர்.